/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சமுதாயக் கூடங்களை ஆக்கிரமிக்கும் கவுன்சிலர்கள் தவிப்பு! நிகழ்ச்சி நடத்த முடியாமல் ஆளும் கட்சி மீது அதிருப்தி
/
சமுதாயக் கூடங்களை ஆக்கிரமிக்கும் கவுன்சிலர்கள் தவிப்பு! நிகழ்ச்சி நடத்த முடியாமல் ஆளும் கட்சி மீது அதிருப்தி
சமுதாயக் கூடங்களை ஆக்கிரமிக்கும் கவுன்சிலர்கள் தவிப்பு! நிகழ்ச்சி நடத்த முடியாமல் ஆளும் கட்சி மீது அதிருப்தி
சமுதாயக் கூடங்களை ஆக்கிரமிக்கும் கவுன்சிலர்கள் தவிப்பு! நிகழ்ச்சி நடத்த முடியாமல் ஆளும் கட்சி மீது அதிருப்தி
UPDATED : டிச 18, 2025 09:18 AM
ADDED : டிச 18, 2025 05:51 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் செயல்படும் சமுதாயக் கூடங்கள், பொது சுகாதார வளாகங்களை ஆக்கிரமித்து கவுன்சிலர்கள் சிலர் பணம் பார்ப்பதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது ஆளுங்கட்சி மீது அதிருப்தியை அதிகப்படுத்துகிறது.
மாவட்டத்தில் 5 நகராட்சிகள், ஒரு மாநகராட்சி, 450 ஊராட்சிகள், 9 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் சமுதாயக்கூடங்களும், பொது சுகாதார வளாகங்கள், மன மகிழ் மன்றங்களும் தேவைக்கேற்ப ஏற்படுத்தப்பட்டுள்ளன. விருதுநகர் நகராட்சியை பொறுத்த வரையில் நகர்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியத்தில் நான்கு சமுதாயக்கூடங்கள் நாராயணமடம் தெரு, மணிநகரம், விஸ்வநாததாஸ் காலனி, அகமது நகர் பகுதிகளில் கட்டப்பட்டன. வெறும் ரூ.2 ஆயிரம் பணத்தை நகராட்சிக்கு கொடுத்து திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
அப்பகுதி நகராட்சி கவுன்சிலர்களின் ஆதிக்கத்தாலும், தனியார் மண்டபங்களின் வருவாய் ஆதாயத்திற்காக சில தனிப்பட்ட நபர்களுக்காக இந்த சமுதாயக் கூடங்கள் செயல்படாமல் பல ஆண்டுகளாக புதர்மண்டியே கிடக்கின்றன. நாளடைவில் பராமரிப்பு இல்லாமல் போனதால் அவற்றின் நள்ளிகளும், இதர உபகரணங்களும் பாழ்பட்டு போய்விட்டன.
கட்டடத்தை பராமரிக்காததால் சில சமுதாயக் கூடங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதே நிலை தான் மாவட்டத்தின் உள்ளாட்சிகளில் உள்ள அனைத்து சமுதாயக் கூடங்களிலும் உள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்கையில் பல பகுதிகளில் எம்.பி., எல்.ஏ., நிதியில் சமுதாயக்கூடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு கட்டப்படும் விருதுநகர் பாத்திமா நகரில் உள்ள சமுதாயக் கூடத்தில் ஒரு சாவி அப்பகுதி கவுன்சிலர் கணவரிடம் உள்ளது. சமுதாயக்கூடங்களை முழுமையாக செயல்படுத்துவதில் உள்ளாட்சிகளின் பங்கே முக்கியம். மாவட்டம் முழுவதும் கவுன்சிலர்கள் சிலர் கையகப்படுத்துவதால் வருவாய் இழப்பு தான் ஏற்படும்.
இதே போல் மன மகிழ்மன்றங்களும் ஆளுங்கட்சியினர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. பொது சுகாதார வளாகங்கள் அந்தந்த ஏரியா கவுன்சிலர்கள் ஆக்கிரமித்து பணம் பார்க்கின்றனர். அருகே மாற்றத்திறனாளி எனும் பெயரில் பெட்டிக்கடைக்கு அனுமதி வாங்கி விட்டு அடுத்தடுத்து கடை ஏற்படுத்தி வாடகைக்கு விடுகின்றனர். தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்களின் இந்த அட்டூழியங்களால் மக்களுக்கு ஆளுங்கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
எனவே உள்ளாட்சிகளுக்கு கிடைக்கும் நிதியை முழுங்கும் இக்கவுன்சிலர்கள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.

