/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மயானம் இல்லாமல் ரோடு ஒரங்களில் இறந்தவர்கள் எரிப்பு
/
மயானம் இல்லாமல் ரோடு ஒரங்களில் இறந்தவர்கள் எரிப்பு
மயானம் இல்லாமல் ரோடு ஒரங்களில் இறந்தவர்கள் எரிப்பு
மயானம் இல்லாமல் ரோடு ஒரங்களில் இறந்தவர்கள் எரிப்பு
ADDED : பிப் 23, 2024 05:25 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் மயானம் இல்லாததால் இறந்தவர்களை ரோடு ஓரங்களில் எரிக்கும் அவல நிலையில் உள்ளனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது செம்பட்டி ஊராட்சிக்குட்பட்டது ஆதிதிராவிடர் காலனி. இக்காலனி உருவாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இவற்றில் 4 தெருக்கள் உள்ளன. அரசு மூலம் கட்டித் தரப்பட்ட வீடுகள் பல ஆண்டுகள் ஆன நிலையில், அனைத்தும் சேதமடைந்தும் கூரைகள் பெயர்ந்த நிலையிலும் உள்ளன. உட்புறப் பகுதிகளில் கம்பிகள் பயந்து சிமெண்ட்பூச்சுகள் அவ்வப்போது விழுந்து வருகிறது. இதனால் பயந்து கொண்டே தான் வீட்டில் வாழ்க்கை நடத்துகின்றனர்.
காலனிக்கு வரும் ரோடு குண்டும் குழியுமாக கற்கள் பெயர்ந்து நடக்க முடியாத நிலையில் உள்ளது. ரோட்டின் இரு புறமும் அடர்ந்து முட்புதர்கள் செடிகள் வளர்ந்தும், தெரு விளக்குகள் இல்லாததாலும் இரவு நேரங்களில் காலனிக்கு வர இப்பகுதி மக்கள் பயப்படுகின்றனர்.
விஷப் பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. மாலை 6:00 மணிக்கு மேல் காலனியை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் சிரமத்துடன் தான் செல்ல வேண்டியுள்ளது. குடிநீர் வசதி இல்லை. தனியார் வண்டிகள் விற்கும் குடிநீரை ஒரு குடம் 10 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. ரோடு மோசமாக இருப்பதால் வண்டிகள் வர தயங்குகின்றன.
ஆதிதிராவிடர் காலனிக்கு என்று மயானம் இல்லை. இதனால் இறந்தவர்களை எரிக்க ரோடு ஓரங்களை தான் பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். இறுதிச்சடங்கு செய்வதில் சிரமப்பட வேண்டி உள்ளது. ஊராட்சி மூலம் வழங்கப்படும் தண்ணீர் உப்புத்தன்மையுடன் இருப்பதால் இதை பயன்படுத்த முடியாமல் உள்ளது.
மயானம் வேண்டும்
அழகர்சாமி, தொழிலாளி: ஆதி திராவிடர் காலனிக்கு அடிப்படை வசதிகளுக்கு கேட்டு ஆண்டு கணக்கில் போராடி வருகிறோம். எங்களுக்கென்று மயான வசதி இல்லாததால் இறந்தவர்களை ரோட்டின் அருகில் எரிக்க வேண்டிய நிலையில் உள்ளது. காலனிக்கு மயானம், ரோடு உட்பட தேவையான வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும்.
வீடு வேண்டும்
அழகம்மாள், குடும்ப தலைவி: ஆதிதிராவிடர் காலனியில் உள்ள வீடுகள் கட்டித் தரப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் அனைத்தும் பெயர்ந்து விழுந்துவிடும் நிலையில் உள்ளது. பாதிப்பேர் வீட்டின் நிலையை கண்டு காலி செய்து வேறு ஊர்களுக்கு சென்று விட்டனர். வீடின்றி, வசதிகள் இன்றி, தீவில் வசிப்பது போல் நாங்கள் உள்ளோம். எங்களுக்கு தேவையான வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும்.
ரோடு, கழிப்பறை வேண்டும்
கற்பகவள்ளி, குடும்ப தலைவி: ஆதிதிராவிடர் காலனிக்கு என்று நவீன சுகாதார வளாகம் கட்டித் தரப்பட வேண்டும். காலனிக்குள் வருவதற்கான ரோடு கிடங்காக உள்ளது. தெருவிளக்கு வசதியும் இல்லை. இதனால் எங்கள் உறவினர்கள் விசேஷ நிகழ்ச்சி என்றால் கூட வர தயங்குகின்றனர். எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து தர வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை மனு கொடுத்தும் ஊராட்சி நிர்வாகம் பாரா முகமாக உள்ளது.