ADDED : ஏப் 03, 2025 05:41 AM

சிவகாசி: சிவகாசி சாட்சியாபுரத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் கட்டப்பட்ட அரசு ஊழியர்களுக்கான 72 வாடகை குடியிருப்புவீடுகள் சேதம் அடைந்து விட்டது. சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் நிலையில் சேதமடைந்த கட்டடங்களை இடிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி சாட்சியாபுரத்தில் 1986ல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ஒரு பிளாக்கில் ஆறு வீடுகள் என 12 பிளாக்கில் 72 வாடகை வீடுகள் கட்டப்பட்டது.
20 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருந்த இந்த குடியிருப்புகள் சேதமடைந்து விட்டதால் இங்கு குடியிருந்தவர்கள் காலி செய்து விட்டனர். தற்போது ஆறு பிளாக்குகளில் உள்ள 72 வீடுகளுமே சேதம் அடைந்து விட்டது. சேதம் அடைந்திருந்தாலும் இரு பிளாக்குகளில் ஒரு சிலர் வேறு வழியின்றி வசிக்கின்றனர்.
இக்கட்டடமும் அவ்வப்போது சேதம் அடைந்து விழுந்து வருகின்றது. சேதம் அடைந்த கட்டடங்களைச் சுற்றிலும்முட்புதர்கள் சூழ்ந்து விட்டது.இப்பகுதி முழுவதுமே பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகளின் இருப்பிடமாக மாறிவிட்டது.
மேலும் சேதம் அடைந்த கட்டடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறிவிட்டது. அருகிலேயே பஸ் ஸ்டாப் இருப்பதால் மக்கள் நடமாட்டம் இருக்கும். அது சமயத்தில் கட்டடம் முற்றிலும் இடிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே சேதம் அடைந்த கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

