/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமடைந்த கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும்
/
சேதமடைந்த கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும்
சேதமடைந்த கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும்
சேதமடைந்த கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும்
ADDED : பிப் 12, 2025 06:27 AM

மாவட்டத்தில் 450 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பல்வேறு நிதிகள் மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு என புது கழிப்பறைகள், சமுதாய கூடங்கள், ரேஷன் கடைகள், நூலகங்கள், நவீன சுகாதார வளாகம், அரசு அலுவலர்கள் பயன்பாட்டிற்கு என வி.ஏ.ஓ., கட்டடம், ஆர்.ஐ., கட்டடம், குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் உள்ளிட்டவைகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த கட்டடங்கள் 20, 30 ஆண்டுகள் கழித்து சேதமடைந்து விடுவதால் மீண்டும் புதியதாக கட்டப்படுகின்றன. கட்டும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
ஆனால் பழைய கட்டடங்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் இந்த கட்டடங்கள் இருப்பதால் எந்த நேரம் விழுந்து விடுமோ என்று அபாயத்தில் உள்ளது.
இது போன்ற கட்டடங்களை உடனடியாக இடித்து அதே இடத்தில் கட்டடத்தை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுப்பது இல்லை. பழைய கட்டடம் சேதம் என்றால் வேறு ஒரு இடத்தில் புதிய கட்டடம் கட்டுகின்றனர்.
பழைய இடத்தில் உள்ள கட்டடமும் இடிந்த நிலையில் அப்படியே உள்ளது.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தெற்குநத்தம் ஊராட்சியில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் கட்டி 30 ஆண்டுகள் ஆன நிலையில், சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
பரளச்சியில் ஆர்.ஐ., கட்டடம் சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
எம்.ரெட்டியபட்டியில் பழைய நுாலகம் சேதமடைந்து விட்டதால் அதன் அருகிலேயே புதிய நுாலகம் கட்டப்பட்டுள்ளது. பழைய நுாலகம் எந்த நேரமும் இடிந்து விடக்கூடிய நிலையில் உள்ளது.
பொம்மகோட்டையில் பயணிகள் நிழற்குடை 25 ஆண்டுகளாக சேதம் அடைந்து உள்ளது. கீழ பூலாங்கால் கிராமத்தில் மேல்நிலைத் தொட்டி இடியும் நிலையில் உள்ளது. இது போன்று பழைய கட்டடங்கள் சேதம் அடைந்த நிலையில் அவற்றை அப்புறப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை அந்த ஊராட்சிகள் எடுப்பது இல்லை.
இதனால் பழைய கட்டடங்கள் குடிமகன்களின் பாராகவும், குற்ற செயல்கள் நடைபெறுவதற்கு ஏதுவான இடமாகவும் இருக்கின்றன. ஒவ்வொரு ஊராட்சியிலும் இடியும் நிலையில் பல கட்டடங்கள் உள்ளன.
மாவட்ட நிர்வாகம் ஒட்டுமொத்த ஊராட்சிகளில் உள்ள பல ஆண்டுகளாக இடியும் நிலையில் உள்ள பழைய கட்டடங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது மக்களின் பயன்பாட்டிற்கு உள்ள சேதமடைந்த கட்டடங்களை இடித்துவிட்டு அந்த இடத்திலேயே புதிய கட்டடங்கள் கட்ட அறிவுறுத்த வேண்டும். -