/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான சுகாதார வளாகம், சாய்ந்த மின்கம்பம்
/
சேதமான சுகாதார வளாகம், சாய்ந்த மின்கம்பம்
ADDED : ஜன 24, 2025 04:11 AM
திருச்சுழி: திருச்சுழி அருகே மீனாட்சிபுரத்தில்  சேதமான சுகாதார வளாகம், சாய்ந்த  மின்கம்பம் போன்றவற்றால்  மக்கள் அவதிப்படுகின்றனர்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மறவர் பெருங்குடி ஊராட்சிக்கு உட்பட்டது மீனாட்சிபுரம். இங்கு 5 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. ஊரில் சுகாதார வளாகம் கட்டி பயன்படுத்த முடியாமலேயே சேதம் அடைந்து உள்ளது. தரைகள் பெயர்ந்து உள்ளே நுழைய முடியாத அளவிற்கு உள்ளது.  மாலை நேரங்களில் சுகாதார வளாகம் குடிமகன்களின் பார் ஆக செயல்படுகிறது. ரோட்டுக்கு அருகில் உள்ள மின்கம்பம் பல ஆண்டுகளாக சாய்ந்த நிலையில் விழும் அபாயத்தில் உள்ளது. இதன் அருகிலேயே புதிய மின்கம்பம் அமைத்துள்ளனர். அமைத்து 8 மாதங்களாகியும் பழைய மின் கம்பத்திலிருந்து  மின்சார கம்பிகள் மாற்றாமல்  உள்ளனர்.
எம். ரெட்டியபட்டி - மீனாட்சிபுரம் ரோடு இரு புறமும் இலந்தை மர முட்கள்  வாகனங்கள் ரோடு ஓரத்தில் ஒதுங்கினால் குத்தி கிழிக்கிறது. ரோடு ஓரங்களில் பள்ளமாக இருப்பதால் ஓரத்தில் ஒதுங்கினால் விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது.  இங்குள்ள நூலகத்தில் ரேஷன் கடை இயங்குவதால் நூலகம் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. புதிய ரேஷன் கடை இங்கு அமைக்க வேண்டும். மயானத்திற்கு செல்லும் ரோடு சேதமடைந்து முட்புதர்கள் வளர்ந்து ஒற்றையடி பாதையாக மாறிவிட்டது.
மயானத்திற்கு செல்ல ரோடு அமைக்க வேண்டும். இங்கு 99 ஏக்கர் பரப்பளவில் உள்ள நஞ்சை கண்மாய் ஒரு காலத்தில் விவசாயத்திற்கு பாசன வசதி தந்தது. 40 ஆண்டுகளாக கண்மாயில் குடிமராமத்து பணிகள் எதுவும் செய்யப்படாத நிலையில், கண்மாயில்  மண் மேவி உள்ளது.  கண்மாயை தூர் வாரி கரைகளை அகலப்படுத்தி மேவிய மண்ணை அப்புறப்படுத்த வேண்டும். காட்டுப்பன்றிகளின் தொல்லையால் விவசாயம் செய்ய  மக்கள் தயங்குகின்றனர்.
ரோடு பராமரிப்பு தேவை
குருசாமி, விவசாயி: ரெட்டியபட்டி- மீனாட்சிபுரம் ரோட்டின்  இரு புறமும் முட்புதர்கள் சீமை கருவேலம் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதால் வாகனங்களில் செல்லும்போது குத்தி கிழிக்கிறது. ரோட்டின் ஓரங்களும் மழையால் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாக கிடக்கிறது. இதனால் வாகனங்கள் ரோட்டின் நடுவில் தான் செல்ல வேண்டியுள்ளது.  எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியவில்லை. ரோட்டிற்கு பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும்.
சாய்ந்த மின் கம்பம்
கிருஷ்ணசாமி, விவசாயி:  சுகாதார வளாகம் அருகில் உள்ள மின்கம்பம் சாய்ந்து விழும்  நிலையில் உள்ளது. இதன் அருகிலேயே புதிய மின்கம்பம் அமைத்து பல மாதங்கள் ஆகியும் மின் வயர்கள் மாற்றாமல் உள்ளது. பழைய மின்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்படுவதற்கும் மின் கம்பிகளை மாற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்மாய் பராமரிப்பு அவசியம்
அழகர்சாமி, விவசாயி:  ஊரில் உள்ள நஞ்சை கண்மாய் ஒரு காலத்தில் விவசாய நிலங்களுக்கு நன்கு பாசன வசதி தந்தது. கண்மாயை தூர்வாரி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் முட்புதர்கள் வளர்ந்து மண் மேவியுள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவது இல்லை. கண்மாயை தூர்வாரி மேவிய மண்ணை அப்புறப்படுத்தி, ஆழப்படுத்த வேண்டும்.

