/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமடைந்த ரேஷன் கடை, சுகாதார வளாகம்
/
சேதமடைந்த ரேஷன் கடை, சுகாதார வளாகம்
ADDED : பிப் 02, 2025 04:43 AM

காரியாபட்டி,: அம்ருத் திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக குடிநீர் சப்ளை செய்ய குழாய் இணைப்பு வழங்கப்பட்டு, குடிநீர் வழங்காமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது, சுகாதார வளாகம், ரேஷன் கடைகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
மல்லாங்கிணர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2 ஆண்டுகளுக்கு முன் அம்ருத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக குடிநீர் சப்ளை செய்ய இணைப்பு வழங்கப்பட்டது. இன்று வரை குடிநீர் சப்ளை இல்லை. குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களால் வீதிகளில் உள்ள ரோடுகளை சேதப்படுத்தி கரடு முரடாக உள்ளது.
திம்மன்பட்டியில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் நீர்க்கசிவு ஏற்பட்டு கட்டடம் எப்போது இடிந்து விழுமா என்கிற சூழ்நிலை இருந்து வருகிறது. மக்கள் பயன்படுத்த அச்சப்படுகின்றனர். இதனால் திறந்தவெளியை பயன்படுத்தி வருவதால் சுகாதார கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 4 இடங்களில் கட்டப்பட்ட கட்டடங்களும் சேதமடைந்து படுமோசமாக இருக்கிறது. மல்லாங்கிணரில் புதிய கட்டடம் கட்டப்பட்டு செயல்படுத்தப்படாமல் உள்ளது. பழைய கட்டடங்களால் விபத்து அச்சம் உள்ளது.
திறந்தும் செயல்படாத ரேஷன் கடை
தியாகராஜன், தனியார் ஊழியர்: ரேஷன் கடை கட்டடம் படுமோசமாக எப்போது இடிந்து விழுமோ என்கிற சூழ்நிலை இருந்து வருகிறது. 3 மாதங்களுக்கு முன் ஒரு ரேஷன் கடைக்கு பதிலாக புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது. திறப்பு விழா நடத்தப்பட்டும், இதுவரை செயல்பாட்டில் இல்லை. இந்தப் பகுதிக்கு செல்ல மக்கள் அச்சத்தில் உள்ளனர். பழைய கட்டடத்தை அப்புறப்படுத்தி புதிய கட்டடத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால்வாய்களில் கழிவுநீர்
சக்கையா, தனியார் ஊழியர்: பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட தகுதி இருந்தும் பலருக்கு கிடைக்கவில்லை. நீர்வரத்து கால்வாயில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை கலக்கச் செய்கின்றனர். சுகாதாரக் கேடுக்கு வழி வகுக்கிறது. தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீரமைக்க வேண்டும்
செல்வகுமார், தனியார் ஊழியர்: திம்மன்பட்டியில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சுகாதார வளாகம் நீர் கசிவு ஏற்பட்டு கட்டடங்களின் சிமென்ட் கலவை பெயர்ந்து விழுகிறது. கட்டடம் வலுவிழந்து எப்போது இடிந்து விழுமோ என்கிற நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பெரும்பாலானவர்கள் திறந்தவெளியை பயன்படுத்தி வருவதால் சுகாதாரக் கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.