/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான ரோடு, குடிநீர் தொட்டி, சுகாதார வளாகம்
/
சேதமான ரோடு, குடிநீர் தொட்டி, சுகாதார வளாகம்
ADDED : அக் 09, 2024 05:18 AM

காரியாபட்டி : பள்ளி நேரங்களில் வராத பஸ்கள், தெருவிளக்கு இல்லை , சேதமான ரோடு, குடிநீர் மேல்நிலை தொட்டி, சுகாதார வளாகம் உட்பட பல்வேறு பிரச்னைகளால் காரியாபட்டி கழுவனச்சேரி குடியிருப்போர் சிரமத்தில் உள்ளனர்.
குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் பாலமுருகன், வெள்ளைச்சாமி, பழனி, ராமநாதன் கூறியதாவது;
பள்ளி மாணவர்கள், வெளியூர் வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் என பஸ் பிடிக்க 4 கி.மீ., தூரம் உள்ள காரியாபட்டிக்கு செல்ல வேண்டும். பல்வேறு கோரிக்கைகளுக்கு பின் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் யாருக்கும் பயன்பாடு இன்றி இருமுறை வந்து செல்கிறது. பயனுள்ள வகையில் வந்து செல்ல நேரத்தை மாற்றி அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. படித்த இளைஞர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.
குரூப் தேர்வு எழுத நூலகம் இல்லாததால் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. பள்ளியில் விளையாட்டு ஆசிரியர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்நிலைப் பள்ளிக்கு செல்ல கண்மாய் கரையில் மெட்டல் ரோடு போடப்பட்டது. தற்போது சேதமாகி கற்களாக இருப்பதால் நடந்து செல்ல முடியவில்லை. தார் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மயானத்திற்கு ரோடு வசதி கிடையாது. தெருவிளக்கு வசதி இல்லை.
இறுதிச்சடங்கு செய்ய எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. மேல்நிலைத் தொட்டி சேதம் அடைந்து வருகிறது. இதனை அப்புறப்படுத்தி புதிய தொட்டி கட்ட வேண்டும். சேதமடைந்துள்ள பெண்கள் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும். விரிவாக்க பகுதிகளில் முற்றிலும் தெருவிளக்கு வசதி இல்லை. இரவு நேரங்களில் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
பெரும்பாலான தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் இல்லாததால், மழை நேரங்களில் சேறும், சகதியுமாக இருக்கிறது. கண்மாயில் சம்பை செடிகள் வளர்ந்துள்ளன. இதனை அப்புறப்படுத்த வேண்டும். குப்பைத்தொட்டிகள் பயன்பாடு இன்றி சேதம் அடைந்து கிடக்கின்றன. அவற்றை சீரமைத்து குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.