/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான ரோடு, வாறுகால், எரியாத தெருவிளக்குகள்
/
சேதமான ரோடு, வாறுகால், எரியாத தெருவிளக்குகள்
ADDED : ஜூலை 29, 2025 12:17 AM

சிவகாசி: சேதமான ரோடு, வாறுகால், எரியாத தெரு விளக்குகள் என சிவகாசி அருகே வடமலாபுரம் ஊராட்சி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக் கின்றனர்.
சீனிவாசா நகர், அண்ணா காலனியை உள்ளடக்கிய வடமலாபுரம் ஊராட்சியில் விருதுநகர் மெயின் ரோட்டில் இருந்து ஊருக்குள் செல்லும் ரோடு சேதம் அடைந்துள்ளது. குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள பட்டாசு கடைகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இங்குள்ள மயானத்தில் குடிநீர், மின்சார வசதி இல்லை.
விசேஷ நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு சமுதாயக்கூடம் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். அண்ணா காலனியில் புதிதாக ரேஷன் கடை கட்ட வேண்டும். தெருக்களில் சேதமடைந்துள்ள ரோடுகளை சீரமைக்க வேண்டும்.
இடித்து அகற்றவும் ஆழ்வார் ராமானுஜம், முன்னாள் கவுன்சிலர்: 53 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி தற்போது முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இதனை இடித்து அகற்றி புதிய தொட்டி கட்ட வேண்டும். இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கைகள் வசதிகள் இல்லாததால் கர்ப்பிணிகள், நோயாளிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கப்பட்டும் குடிநீர் வினியோகம் இல்லாததால் தெற்கு தெரு, வடக்கு தெரு பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
நிழற்குடை அவசியம் கார்த்தீஸ்வரன், டிரைவர்: 2016 ல் ரூ. 17 லட்சத்தில் கிராம சேவை மைய கட்டடம் கட்டப்பட்டது. கட்டப்பட்ட நாளிலிருந்து பயன்பாட்டில் இல்லை. தற்போது சேதம் அடைந்து வருவதால் அதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அண்ணா காலனி பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை அமைக்க வேண்டும்.
சேதமான குளியல் தொட்டி செல்வகுமார், தொழிலதிபர்: அண்ணா காலனி, சீனிவாசா நகரில் தெரு விளக்குகள் எரியாததால் இரவில் மக்கள் அச்சப்படுகின்றனர். அண்ணா காலனியில் பயன்பாட்டில் உள்ள குளியல் தொட்டி சேதமடைந்து பராமரிப்பின்றி உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். வடக்குத் தெருவில் இருந்து கீழத்தெரு வழியாக செல்லும் வாறுகால் சேதம் அடைந்துள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்கியுள்ளது.
மோசமான ரோடு காவியன், தனியார் ஊழியர்: இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச் சுவர் சேதமடைந்துள்ளது. வடமலாபுரத்திலிருந்து சோரம்பட்டி வழியாக 8 கிலோமீட்டர் துாரத்தில் கன்னி சேரி, விருதுநகர் கலெக்டர் அலுவலகம் செல்லலாம். ஆனால் இந்த ரோடு சேதம் அடைந்துள்ளதால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள கிணறு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வந்தது. தற்போது துார்ந்துள்ளதால் பயன்பாட்டில் இல்லை. துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.