/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான வணிக வளாகம், நாய்கள் தொல்லை
/
சேதமான வணிக வளாகம், நாய்கள் தொல்லை
ADDED : ஜன 26, 2025 05:15 AM

காரியாபட்டி, : காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே சேதமடைந்து பயன்படுத்தாத வணிக வளாக கட்டடத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறத. தெருகளில் நாய்கள் அதிகரிப்பால் மக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டியதுள்ளது.
காரியாபட்டி பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கட்டடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் வலுவிழந்து ஆங்காங்கே கூரை பூச்சு பெயர்ந்து விழுகின்றன. ஆபத்தான சூழ்நிலை இருப்பதால் கடை உரிமையாளர்கள் சிலர் அச்சமடைந்து பூட்டு போட்டனர். திறந்த வெளி மது பாராகவும், கழிப்பிடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். துர்நாற்றம் வீசுவதால் அக்கம் பக்கத்தில் கடை வைத்திருப்பவர்கள் முகம் சுளிக்கின்றனர். வீதிகளில் சுற்றி திரியும் நாய்களால் விபத்துக்கள் ஏற்படுகிறது.
ஆபத்தான வணிக வளாகம்
சுரேஷ், தனியார் ஊழியர்: பேரூராட்சிக்கு வருவாய் தரக்கூடிய வணிகவளாக கட்டடங்கள் உள்ளன. அதில் பஸ் ஸ்டாண்ட் அருகே கட்டப்பட்ட கட்டடம் வலுவிழந்து, கூரை உடைந்து விழுகிறது. ஆபத்தான சூழ்நிலை இருப்பதால் சிலர் கடைகளை நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். திறந்தவெளி மது பாராகவும், கழிப்பிடமாகவும் பயன்படுத்தி வருவதால் அப்பகுதியில் மக்கள் நடமாட முடியவில்லை. பழைய கட்டடத்தை அப்புறப்படுத்தி புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாய்களால் தொல்லை
பாஸ்கரன், விவசாயி: கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றி திரிகின்றன. ஒன்றோடு ஒன்று சண்டை இட்டு ஊளையிடுகின்றன. முக்கிய ரோடுகளில் குறுக்கும் நெடுக்கமாக சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். அச்சத்துடன் நடமாட வேண்டிய சூழ்நிலை உள்ளதால் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளமான ரோடுகள்
ராமச்சந்திரன், தனியார் ஊழியர்: வீதிகளில் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் ரோடு சேதம் அடைந்துள்ளது. பேவர் பிளாக் கற்கள் நீட்டிக் கொண்டு இருப்பதால் நடந்து செல்பவர்கள் இடறி விழுகின்றனர். கழிவு நீர் செல்ல வழி இன்றி, ஆங்காங்கே சேரும் சகதியுமாக உள்ளது. கொசுத்தொல்லையால் மக்கள் சிரமப்படுகின்றனர். வீதிகளில் சேதமடைந்துள்ள பேவர் பிளாக் கற்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.