/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டையில் பிளக்ஸ் பேனர்களால் ஆபத்து
/
அருப்புக்கோட்டையில் பிளக்ஸ் பேனர்களால் ஆபத்து
ADDED : ஜூலை 24, 2025 04:44 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் கோர்ட்டு உத்தரவுகளை மதிக்காமல் பொது இடங்களிலும் ரோடு ஓரங்களிலும் மெகா பிளக்ஸ் பேனர்களை அமைத்து வாகன ஓட்டுனர்களுக்கு கவனம் சிதறல்களை ஏற்படுத்துவதுடன் விபத்தும் நடக்கிறது.
அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் சந்திப்பு, பந்தல்குடி ரோடு, திருச்சி ரோடு, மதுரை ரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட், விருதுநகர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கட்சிகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார்கள் மெகா பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர்.
தற்போது ஆடி மாத காற்று பலமாக வீசுவதால் பேனர்கள் அங்கும் இங்கும் அசைந்து பொது மக்களை பீதியில் ஆழ்த்துகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் பேனர்களை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் கட்சிகளுக்கு இல்லை.
காந்தி நகர் சந்திப்பில் ரோடுகளின் இரு புறமும் வைத்துள்ள பேனர்களால் வளைவில் திரும்பும் போது வாகனங்கள் தெரியாமல் பேனர்கள் மறைத்துள்ளதால் விபத்து ஏற்படுகிறது.
இரண்டு தினங்களுக்கு முன்பு காந்தி நகரில் டூவீலரில் சென்ற இருவர் பிளக்ஸ் பேனர் சாய்ந்ததில் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளனர். நகரில் நகராட்சி, போலீசார் பேனர்கள் வைப்பவர்களை கண்டும் காணாமலும் உள்ளனர்.
கோர்ட்டு உத்தரவை மதிப்பதில்லை. மாவட்ட நிர்வாகம் பேனர்களை அகற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகினி, அருப்புக்கோட்டை நகரமைப்பு பிரிவு அலுவலர்: மக்களுக்கு இடைஞ்சல் செய்யும் வகையில் பேனர்கள் வைக்க கூடாது. அவ்வப்போது பேனர்களை அப்புறப்படுத்துகிறோம். தற்போது பேனர் வைத்திருப்பது எங்களுக்கு தெரியாது.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம்: மெகா பேனர்கள் வைப்பது தவறு தான். அவ்வாறு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பேனர்களை அப்புறப் படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.