/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதிரை வண்ணார் நல வாரிய அட்டைகள் வழங்குவதில் தாமதம் உதவிகள் கிடைக்காமல் பரிதவிக்கும் மக்கள்
/
புதிரை வண்ணார் நல வாரிய அட்டைகள் வழங்குவதில் தாமதம் உதவிகள் கிடைக்காமல் பரிதவிக்கும் மக்கள்
புதிரை வண்ணார் நல வாரிய அட்டைகள் வழங்குவதில் தாமதம் உதவிகள் கிடைக்காமல் பரிதவிக்கும் மக்கள்
புதிரை வண்ணார் நல வாரிய அட்டைகள் வழங்குவதில் தாமதம் உதவிகள் கிடைக்காமல் பரிதவிக்கும் மக்கள்
ADDED : ஜூலை 22, 2025 03:20 AM
விருதுநகர்: தமிழகத்தில் புதிரை வண்ணார் நல வாரிய அட்டைகள் வழங்குவதில் மெத்தன போக்கு காட்டும் தாசில்தார்களால் திட்டங்கள் கிடைக்காமல் சிரமப்படுவதாக அம்மக்கள் புலம்பு கின்றனர்.
தமிழகத்தில் 2009ல் தி.மு.க., ஆட்சியில் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ்புதிரை வண்ணார் நல வாரியம் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் துவங்கி வைக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட நிலையில் 2021ல் ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின், 2023ல் இந்த நல வாரியத்தை மறு சீரமைத்தார்.
இதையடுத்து மீண்டும் அம்மக்கள் விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டது.துறை நடத்திய உள் மதிப்பீட்டின்படி, சமூக மக்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியது தெரிந்தது. தமிழகத்தின் தென் பகுதிகளான விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் பகுதிகளிலும், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தேனி மாவட்டங்களில் இந்த சமூகத்தின் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ளது.
இம்மக்கள் துணிகளைத் துவைத்தல், இறுதிச் சடங்குகளை நடத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். புதிரை வண்ணார் மக்கள் ஓரங்கட்டப்படுவதை கருத்தில் கொண்டு தான் இந்த நலவாரியமே கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது தாசில்தார்கள் வாரிய அட்டை வழங்குவதில் மெத்தன போக்கும், வருவாய்த் துறை அவர்களுக்கு ஜாதி சான்றுகள்வழங்குவதில் தயக்கமும் காட்டுகின்றன.
காரணம் பாரம்பரியமாக இதே தொழில்களில் ஈடுபட்டுள்ள பிற சமூகங்களும் உள்ளன. அவர்கள் இன்னும் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களை கேட்க வேண்டியுள்ளது.இதனால்ஜாதி சான்று, வாரிய உறுப்பினர்களாக்குவதில் சில சிரமங்கள் உள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கிறது.
அதே நேரம் மக்கள் கூறும் போது, வாரியத்தில் சேரஜாதி சான்று இருந்தாலே போதும் என்கின்றனர். ஆனால் தாசில்தார்களோ வருவாய், இருப்பிட சான்று வேண்டும் என அலைக்கழிக்கின்றனர்.இதனால் திருமண, இறுதி சடங்கு உதவி தொகைகள் கிடைப்பதில்லை.
மாணவர்களுக்கு ஜாதி சான்றுக்கு அலைக்கழிப்பதால் படிப்பை தொடர முடியாத நிலை உள்ளது. எனவே புதிரை வண்ணார் நல வாரிய அட்டை, ஜாதி சான்று வழங்குவதை உறுதி செய்யஅரசுமுழுவீச்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.