/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
600 மாணவர்களின் தெத்துப்பல் சீரமைப்பு
/
600 மாணவர்களின் தெத்துப்பல் சீரமைப்பு
ADDED : ஏப் 17, 2025 05:22 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மலரும் புன்னகை திட்டத்தில் 600 பள்ளி மாணவர்களின் தெத்து பல் சரி செய்ய, சீரான பல்வரிசைக்கு 'ப்ரேஸ்கள்' பொருத்தப்பட்டு வெற்றி கண்டுள்ளதாக கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துஉள்ளார்.
மாவட்டத்தில் இருக்க கூடிய நிறுவனங்களில் சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலமாக அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்க கூடிய பல் மருத்துவர்கள் இணைந்து மலரும் புன்னகை திட்டத்தில் தெத்து பல் சரி செய்யும் மருத்துவ முகாம் 2024ல் நடத்தப்பட்டது.
இதில் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 5 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தெத்துபல் குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்தனர். ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவாகும் இந்த பல் வரிசை சீரமைப்பு சிகிச்சையை மாவட்ட நிர்வாகம் இலவசமாக செய்தது.
600க்கும் மேற்பட்ட ஏழை அரசு பள்ளி மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு உயர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். பல் வரிசை சீரமைப்பு மருத்துவமனைக்கு அழைத்து சென்று 'ப்ரேஸ்கள்' பொருத்தப்பட்டது.
தற்போது ஓராண்டு கடந்த நிலையில் மாணவர்களுக்கு பல் வரிசை சீராகி மலரும் புன்னகை திட்டம் வெற்றி கண்டுஉள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். இதை சரி செய்வதன் மூலம் மாணவர்களுக்கு உள்ள தாழ்வு மனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை ஏற்படுகிறது என்றும் கூறினார்.