ADDED : ஜன 17, 2025 04:50 AM
நரிக்குடி: நரிக்குடி ரயில்வே ஸ்டேஷனில் ரயில்கள் நின்று செல்லாததால் பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. வெளியூர்களுக்கு செல்பவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மறுபடியும் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
நரிக்குடியில் ரயில்வே ஸ்டேஷனில் சென்னை, செங்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஊர்களுக்கு ரயில் மூலம் பயணம் மேற்கொண்டனர். அப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததுடன் பணம், நேரம் மிச்சமானது.
இந்நிலையில், கொரோனாவுக்கு பின் ரயில்கள் நரிக்குடி ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்துவதை தவிர்த்தனர். தற்போது பயணிகள்இன்றி ஸ்டேஷன் வெறிச்சோடி கிடக்கிறது.
அப்பகுதி பயணிகள் மதுரை, அருப்புக்கோட்டை, மானாமதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று பஸ் பிடித்து செல்ல வேண்டி இருப்பதால் பணம், நேரம் விரயமாகிறது. வீண் அலைச்சலால் மன உளைச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த வழித்தடத்தில் சிலம்பு, பொதிகை, தாம்பரம் - கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்று வருகின்றன. ரயில்கள் நின்று செல்லும் பட்சத்தில்இப்பகுதி பயணிகளுக்கும், வணிக ரீதியாக வியாபாரிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதனை கருத்தில் கொண்டு அனைத்து விரைவு ரயில்களையும் நரிக்குடி ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.