/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கலில் ரயில்வே மேம்பால பணிக்கு நிதி ஒதுக்கியும் வேலை துவங்குவதில் தாமதம்
/
திருத்தங்கலில் ரயில்வே மேம்பால பணிக்கு நிதி ஒதுக்கியும் வேலை துவங்குவதில் தாமதம்
திருத்தங்கலில் ரயில்வே மேம்பால பணிக்கு நிதி ஒதுக்கியும் வேலை துவங்குவதில் தாமதம்
திருத்தங்கலில் ரயில்வே மேம்பால பணிக்கு நிதி ஒதுக்கியும் வேலை துவங்குவதில் தாமதம்
ADDED : ஆக 30, 2025 11:58 PM

சிவகாசி: திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில் நிதி ஒதுக்கப்பட்டும் இன்று வரை பாலப்பணி துவங்காமல் உள்ளது.
திருத்தங்கல் ரயில்வே வழித்தடத்தில் பொதிகை, சிலம்பு, கொல்லம் எக்ஸ்பிரஸ், பயணிகள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. தினமும் 10 க்கும் மேற்பட்ட முறை ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரயில்வே கேட் வழியாக தினமும் தொழிலாளர்கள் , அரசு அலுவலர்கள், மாணவர்கள் என ஆயிரகணக்கானோர் தினமும் நகருக்கு வந்து செல்கின்றனர். காலை 8:15 லிருந்து 9:30 மணிக்கு இரு ரயில்கள் இந்த வழித்தடத்தில் செல்கிறது.
அந்த நேரத்தில் 40 நிமிடம் கேட் அடைக்கப்படுகிறது. இதனால் அலுவலகம், பள்ளி கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மதிய வேளையில் இரு முறை ரயில் இந்த வழித்தடத்தில் செல்கிறது. அந்த நேரத்தில் கொளுத்தும் வெயிலில் வாகன ஓட்டிகள் காத்திருந்து அவதிப் படுகின்றனர்.
மாலை 5:30 மணிக்கு இரு முறை அடுத்தடுத்து ரயில்வே கேட் அடைக்கப்படும் பொழுது வேலை முடிந்து, பள்ளி கல்லுாரி முடிந்து வீட்டிற்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். இரவிலும் இதே நிலைதான். அவசரத்திற்கு வருகின்ற ஆம்புலன்ஸ் வாகனமும் வேறு வழியின்றி காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே இங்கு ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக முதல் கட்ட பணியாக மண் பரிசோதனை பணி, நில அளவீடு பணிகள் நடந்தது. அரசிதழில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2024 ஜன. ல் சாட்சியாபுரம், திருத்தங்கலில் பாலம் அமைக்க பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். சாட்சியாபுரத்தில் பாலம் அமைக்கும் பணி துவங்கி முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் திருத்தங்கலில் அதற்கு அடுத்த கட்டப் பணிகள் துவங்கவில்லை. அதே சமயத்தில் பாலம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் திருத்தங்கலிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை துவங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

