/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோயில்களில் கூடுதல் வசதி செய்வதற்கு எதிர்பார்ப்பு குடிநீர், சுகாதாரம் இல்லாததால் பக்தர்கள் தவிப்பு
/
கோயில்களில் கூடுதல் வசதி செய்வதற்கு எதிர்பார்ப்பு குடிநீர், சுகாதாரம் இல்லாததால் பக்தர்கள் தவிப்பு
கோயில்களில் கூடுதல் வசதி செய்வதற்கு எதிர்பார்ப்பு குடிநீர், சுகாதாரம் இல்லாததால் பக்தர்கள் தவிப்பு
கோயில்களில் கூடுதல் வசதி செய்வதற்கு எதிர்பார்ப்பு குடிநீர், சுகாதாரம் இல்லாததால் பக்தர்கள் தவிப்பு
ADDED : டிச 14, 2025 05:55 AM

தற்போது கோயில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நகரிலும் அதிகரித்து வருகிறது. திருச்செந்தூர், ராமேஸ்வரம், பழநி, மதுரை, திருவண்ணாமலை போன்ற நகரங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பக்தர்களிடம் ஆன்மிகம் எழுச்சி பெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், சதுரகிரி சுந்தர மகாலிங்கம், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உட்பட பல்வேறு கோயில்களுக்கு விருதுநகர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்ட மக்களையும் கடந்து மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டாள், சதுரகிரி சுந்தரமகாலிங்கம், இருக்கன்குடி மாரியம்மன் கோயில்களுக்கு வெளி மாவட்ட பக்தர்கள் அதிகளவில் வரும் நிலையில் போதிய சுகாதார வளாகம், வாகன பார்க்கிங், குடிநீர், ஓய்வறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு பக்தர்கள் ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்க மாவட்ட நிர்வாகம், அறநிலையத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள்
எதிர்பார்க்கின்றனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வெளி மாநில பக்தர்கள் வரும் நிலையில், அவர்களின் நலன் கருதி மலை அடிவாரத்தில் போதிய அளவிற்கு சுகாதார வளாக வசதி, குளியலறை, தங்குமிடம், வாகன வசதி, மின்விளக்கு, மருத்துவ வசதிகள் இல்லை. இதனால் வார விடுமுறை, பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வரும் வெளி மாவட்ட பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
108 வைணவ தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வரும் வெளி மாவட்ட பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் நிலையில் இன்னும் போதிய அளவிற்கு சுகாதார வளாக வசதி இல்லை. இதனால் இயற்கை உபாதையை கழிக்க பக்தர்கள் இடமின்றி தவிக்கின்றனர். பக்தர்களின் வாகனங்கள் மாட வீதிகளிலும், ரத வீதிகளிலும் வீட்டு வாசல்களை மறைத்து நிறுத்தப்படுகிறது. இதனால் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது.
மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலுக்கும் பக்தர்கள் அதிக அளவில் வரும் நிலையில் சுகாதார வளாக வசதி போதுமானதாக இல்லை. இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு விருதுநகர் மாவட்ட பக்தர்களை விட தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அதிகளவில் வரும் நிலையில் போதிய அளவில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பல ஆண்டுகளாக மக்கள் தவித்து வருகின்றனர். தற்போது ஆலய பெருந்திட்டத்தின்படி பணிகள் நடந்து வந்தாலும் தற்போது கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
இதுபோல் மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட பல கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கும் நிலையே நீடிக்கிறது. எனவே, அறநிலையத்துறை, அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட அரசு நிர்வாகம் ஒருங்கிணைந்து கோயில் அமைந்துள்ள பகுதிகளில் அடிப்படை வசதிகளை போதுமான அளவிற்கு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.

