/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டெண்டர்களில் தி.மு.க.,வினர் தலையீடு
/
டெண்டர்களில் தி.மு.க.,வினர் தலையீடு
ADDED : டிச 30, 2025 06:03 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் செய்யப்படும் பணிகளுக்கான டெண்டர்கள் விடுவதில் தி.மு.க., நிர்வாகிகள் தலையீடு அதிகமாக இருப்பதால் , ஊராட்சி செயலாளர்கள், ஒப்பந்தகாரர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 32 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றன. தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சி தி.மு.க., வின் பதவிக்காலம் முடிய சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் 20 நாட்களுக்கு முன்பு மக்களின் பல்வேறு கோரிக்கைகள் மனுவாக வந்ததையடுத்து, மாவட்ட நிர்வாகம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.12 .80 கோடி ஒதுக்கியது. இதை குறிப்பிட்ட ஊராட்சிகளுக்கு மட்டும் பேவர் பிளாக் ரோடு போடுவதற்கு டெண்டர் விடப்பட்டது.
இதேபோன்று 10 நாட்களுக்கு முன்பு, ஊராட்சிகளின் நிதி ரூ 1 .17 கோடி அடிப்படை வசதிகள் செய்ய டெண்டர் விடப்பட்டது. ஊராட்சி ஒன்றிய நிதி அந்தந்த ஊராட்சி செயலர்கள் அவர்களுக்குரிய ஊராட்சியில் தொழில்வரி, குடிநீர் வரி, உள்ளிட்ட வரி இனங்களுக்கான வரிகளை வசூல் செய்து சேமித்து வைத்த நிதி . இந்த நிதியை ஊராட்சிகளில் அத்தியாவசிய பணிகள் செய்ய பயன்படுத்தும் போது ஊராட்சி செயலர்களுடன் கலந்து பேசி டெண்டர் விடுவது வழக்கம்.
ஆனால் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சிகளின் நிதியை ஒப்பந்தகாரர்களுக்கும் தெரியப்படுத்தாமலும் ஊராட்சி செயலாளர்களுடன் கலந்து பேசாமல் டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில், அருப்புக்கோட்டை தி.மு,க., நிர்வாகியின் தலையீடு அதிகமாக இருப்பதாக ஊராட்சி செயலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காமேஸ்வரி, பி.டி.ஓ., அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்: டெண்டர் விடுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஊராட்சிகளுக்கான பணிகளுக்கு அனைத்து ஒப்பந்த காரர்களுக்கும் உரிய முறையில் தெரியப்படுத்தி அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் டெண்டர் விடப்படும்.,என்றார்,. ஆனால் டிச.24ல் ஊராட்சி நிதிக்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருவதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் தான் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

