/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆசிரியர் மண்டையை உடைத்த மது போதை மாணவர்கள் கைது
/
ஆசிரியர் மண்டையை உடைத்த மது போதை மாணவர்கள் கைது
ADDED : ஜூலை 17, 2025 02:55 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மது போதையில் வந்ததை கண்டித்த ஆசிரியர் சண்முகசுந்தரம், 47, என்பவரை மது பாட்டிலால் தாக்கி மண்டையை உடைத்த பிளஸ் 2 மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் திருத்தங்கல் சி.ரா., அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அரசியல் அறிவியல் பாடம் எடுத்து வருகிறார்.
நேற்று மதியம் உணவு இடைவேளைக்கு பின், சண்முகசுந்தரம் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார்.
அப்போது, வகுப்பறையை கடந்து பிளஸ் 2 மாணவர்கள் நான்கு பேர் சென்றனர்.
அவர்களை அழைத்த சண்முகசுந்தரம், 'ஏன் தாமதமாக வருகிறீர்கள்' என விசாரித்தார்.
அப்போது, அவர்களிடம் இருந்து மது அருந்திய வாடை வந்ததால் மாணவர்களிடம், 'மது அருந்தி உள்ளீர்களா' என கேட்டார். அதற்கு, அந்த மாணவர்கள், இல்லை என தெரிவித்தனர்.
தலைமையாசிரியரிடம் வருமாறு அழைத்த போது, இரு மாணவர்கள் பையில் வைத்திருந்த மது பாட்டிலால் சண்முகசுந்தரத்தை தாக்கினர். இதில் ஆசிரியருக்கு தலை, நெற்றி, தாடையில் காயம் ஏற்பட்டது. மண்டை உடைந்த நிலையில் அவர் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து மாணவர்களிடம் போலீசார், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின், ஆசிரியர் சண்முகசுந்தரத்தை தாக்கிய இரு மாணவர்களை திருத்தங்கல் போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.
இதே பள்ளியில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், ஆசிரியர் ஒருவரை மாணவர் கத்தியால் குத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.