ADDED : ஜூன் 06, 2026 11:20 PM
ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பின்போது பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட டி.எஸ்.பி.க்கள் மீண்டும் இடமாறுதல் பெற டி.ஜி.பி.யின் உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஒரே போலீஸ் துணைக் கோட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்கள், சொந்த மாவட்டத்தில் பணியாற்றியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட டி.எஸ்.பி.க்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகள் முடிந்து ஒரு மாதமாகி விட்டது. வருவாய்த் துறையில் தாசில்தார்கள் துவங்கி கலெக்டர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். காவல்துறையில் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், தேர்தலின் போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட டி.எஸ்.பி.க்கள் இன்னும் பழைய இடங்களுக்கோ அல்லது விரும்பும் இடங்களுக்கோ டிரான்ஸ்பர் கிடைக்காமல் தவிக்கின்றனர். தங்களுக்கு புதிய டி.ஜி.பி. விரைவில் பணியிட மாற்றம் தருவார் என காத்திருக்கின்றனர்.
