/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டிராபிக் போலீசார் பற்றாக்குறையால் போக்குவரத்து பாதிப்பு
/
டிராபிக் போலீசார் பற்றாக்குறையால் போக்குவரத்து பாதிப்பு
டிராபிக் போலீசார் பற்றாக்குறையால் போக்குவரத்து பாதிப்பு
டிராபிக் போலீசார் பற்றாக்குறையால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 04, 2024 04:17 AM
சிவகாசியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகை அடிப்படையில் டிராபிக் போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். அன்றைய காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட டிராபிக் போலீஸ் பணியிடம் சரியாக இருந்தது. ஆனால் தற்சமயம் மக்கள் தொகை எத்தனையோ மடங்கு உயர்ந்து விட்டது. டூ வீலர், கார் உள்ளிட்ட வாகனங்களும் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரித்துள்ளது. மேலும் தொழில் நகரான இங்கு அதிகளவில் வாகனங்கள் வந்து செல்கின்றது.
பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. ஆனால் டிராபிக் போலீசார் மட்டும் குறைந்தளவில் பணிபுரிகின்றனர். இங்கு காலை பள்ளி துவங்கும், முடியும் நேரத்தில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. ஏனெனில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நடமாடுகின்றனர். சேர்மன் சண்முகம் நாடார் ரோடு, விளாம்பட்டி ரோடு, தேரடி வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலால் அவதி பட நேரிடுகின்றது.
தவிர, காரனேசன் விலக்கு, நாரணாபுரம் முக்கு. பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப், இரட்டை பாலம் விலக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டிராபிக் சிக்னல்களும் செயல்படாத காரணத்தால் , போக்குவரத்தை சரி செய்ய , குறைந்த அளவில் பணியில் இருக்கும் டிராபிக் போலீசார் சிரமப்படுகின்றனர். சிவகாசியில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் உட்பட 70 டிராபிக் போலீசார் இருக்க வேண்டிய நிலையில் இங்கு 20 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.
பணி நெருக்கடியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு , அவ்வப்போது விபத்தும் ஏற்படுகிறது. மேலும் ஆக்கிரமிப்பால் நகரில் அனைத்து பகுதிகளிலும் ரோடுகள் குறுகி விட்டன. எந்த நேரமானாலும் போக்குவரத்து நெரிசலாகவே இருக்கின்ற நிலையில் , 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட குறைந்த இடங்களில் பணிபுரியும் டிராபிக் போலீசாரால் போக்குவரத்தை சரி செய்ய முடியவில்லை.
தற்போது சாட்சியா புரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருவதால் மாற்றுப் பாதையில் வாகனங்கள் வருகின்றன. ஒரே நேரத்தில் அதிக வாகனங்கள் வருவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. தீபாவளி விரைவில் வர உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகமானோர் பட்டாசு வாங்குவதற்காக சிவகாசி வருகின்றனர்.
எனவே டிராபிக் போலீசாரை கூடுதலாக நியமித்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.