ADDED : மார் 17, 2024 11:59 PM

சிவகாசி : திருத்தங்கல் 17 வது வார்டு வையன் தெருவில் செயல்படாமல் உள்ள சமுதாயக் கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருத்தங்கல் 17வது வார்டு வையன் தெருவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இப்பகுதி மட்டுமில்லாமல் வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதி மக்களும் தங்கள் வீட்டு திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சமுதாயக்கூடம் தற்போது சேதம் அடைந்து பயன்பாட்டில் இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் தங்கள் வீட்டு விசேஷங்களை நடத்துவதற்கு சிரமப்படுகின்றனர். வேறு வழி இன்றி கட்டணம் செலுத்தி தனியார் மண்டபங்களில் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதே நிலை நீடித்தால் சமுதாயக்கூடம் முற்றிலும் சேதம் அடைந்து வீணாகிவிடும். எனவே சமுதாயக் கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

