/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இ.டி.,ரெட்டியபட்டியில் மழையால் சேதமடைந்த மக்காச்சோளம்
/
இ.டி.,ரெட்டியபட்டியில் மழையால் சேதமடைந்த மக்காச்சோளம்
இ.டி.,ரெட்டியபட்டியில் மழையால் சேதமடைந்த மக்காச்சோளம்
இ.டி.,ரெட்டியபட்டியில் மழையால் சேதமடைந்த மக்காச்சோளம்
ADDED : ஜன 20, 2024 04:15 AM

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் இ.டி.,ரெட்டியபட்டி பகுதியில் அறுவடை செய்யும் நேரத்தில் தொடர் மழையால் மக்காச்சோளம் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் இ.டி.,ரெட்டியபட்டி பகுதியில் 1500 ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். ஒரு ஏக்கருக்கு உழவு, களை எடுத்தல், மருந்து தெளித்தல் என ரூ. 25,000 முதல் ரூ. 30,000 வரை விவசாயிகள் செலவழித்துள்ளனர்.
ஏற்கனவே பெய்த மழையில் மக்காச் சோளம் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது. இதனால் ஒரு ஏக்கருக்கு 20 முதல் 25 குவிண்டால் வரை சோளம் கிடைக்கும் நிலையில் இருந்தது. சமீபத்தில் அடுத்தடுத்து பெய்த தொடர் மழையால் விவசாய நிலத்திற்குள் மழை நீர் பாய்ந்து மக்காச்சோளம் பயிர்கள் சாய்ந்து சேதம் அடைந்தது.
மேலும் விவசாய நிலத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் இருக்கின்ற பயிர்களை அறுவடை செய்யவும் வழியில்லை. மேலும் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த மக்காச்சோளத்திற்குள் மழை நீர் இறங்கியதால் பெரும்பான்மையானவை பூஞ்சாணம் பிடித்து விட்டது.
நல்ல விளைச்சல், நல்ல விலை கிடைக்க இருந்த நிலையில் மழையால் பயிர்கள் சேதம் அடைந்ததால் பாதிக்கும் மேல் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதே போல் எட்டக்காபட்டி, எதிர் கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்காச்சோளத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பாண்டி, விவசாயி: இரண்டு ஆண்டுகளாக மக்காச்சோளத்தில் நல்ல விளைச்சல் இருந்து வந்தது. இந்த ஆண்டும் அதேபோல் நல்ல விளைச்சல் கொடுத்து அறுவடைக்கு தயாரான நிலையில் தொடர் மழையால் அனைத்தும் வீணாகிவிட்டது. இப்போது வரையிலும் பெரும்பான்மையான நிலத்திற்குள் உள்ள தண்ணீர் வெளியேறவில்லை. அறுவடை செய்ய முடியாத நிலையில் மீண்டும் முளைத்து வீணாக வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த ஆண்டு மக்காச்சோளத்தில் 50 சதவீதம் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.