ADDED : பிப் 21, 2025 07:12 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நேதாஜி நகர் விரிவாக்க பகுதிக்கு செல்லும் பாதை நடுவில் மின்வாரிய டவர் இருப்பதால் மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடைஞ்சலாக உள்ளது.
அருப்புக்கோட்டை நகராட்சி 25வது வார்டுக்குட்பட்டது நேதாஜி நகர் விரிவாக்க பகுதி. காந்தி நகர் சர்வீஸ் ரோட்டில் இருந்து விரிவாக்க பகுதி ரோடு வழியாக செம்பட்டி செல்லும் மண்சாலை உள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலை பயன்படுத்தி தான் ஐந்து கிராம மக்கள் விரிவாக்க பகுதி மக்கள் வந்து செல்வர். 20 ஆண்டுகளுக்கு முன்பு வீடுகள் எதுவும் இல்லாததால் மின் வாரியத்தினர் பாதை நடுவில் உயர் அழுத்த மின் டவரை அமைத்தனர். நகராட்சி கட்டுப்பாட்டில் இந்த பகுதி இருந்தும் பாதை நடுவில் டவர் அமைப்பதற்கு மறுப்பு தெரிவிக்காமல் விட்டு விட்டனர்.
தற்போது அதிகமான வீடுகள் வந்துள்ள நிலையில், பாதையில் இருபுறமும் காலியாக உள்ள பகுதிகளில், பிளாட் உரிமையாளர்கள் முள்வேலி அமைத்து விட்டனர். பாதையின் நடுவே டவர் இருப்பதால் போக்குவரத்திற்கும் மக்களுக்கும் பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள வீடுகளுக்கு செல்வதற்கு 1 கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மின்வாரிய டவரை அப்புறப்படுத்தவோ அல்லது மாற்றுப் பாதைக்கான நடவடிக்கை எடுக்கவோ வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.