ADDED : நவ 25, 2024 11:44 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் யானை கூட்டம் புகுந்து மாந்தோப்புகளை சேதப்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் ராக்காச்சி அம்மன் கோயில், செண்பகத் தோப்பு, பந்த பாறை பகுதிகளில் 3 மாதங்களாக யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது.
மாலை 6:00 மணிக்குமேல் மாந்தோப்புக்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்தும் யானைகள் அதிகாலையில் மலைப்பகுதிக்குள் சென்று விடுகின்றன. வனத்துறையினர் இரவு பகலாக விரட்டி அடித்தாலும் மீண்டும் மீண்டும் தோப்புகளுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.
நேற்று முன்தினம் இரவு சமரசம் என்பவரின் தோப்புக்குள் புகுந்த மூன்று யானைகள் அங்குள்ள மாமர கிளைகளை முறித்து சேதப்படுத்தியுள்ளது. தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் செல்லமணி தலைமையிலான வனத்துறையினர் யானைகளை மலைப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.