/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வனத்தில் பல்லுயிர் தன்மையை பாதுகாக்கும் யானைகள்
/
வனத்தில் பல்லுயிர் தன்மையை பாதுகாக்கும் யானைகள்
ADDED : ஜன 28, 2024 07:21 AM

ராஜபாளையம் : ''யானையின் கழிவிலிலிருந்து முளைப்பு திறன் அதிகரித்த 4000 விதைகள் வெவ்வேறு வனப்பகுதிகளில் பரவி வனத்தின் பல்லுயிர் தன்மை பாதுகாக்கப்படுறது'', என ராஜபாளையத்தில் நடந்த கருத்தரங்கில் வன உயிரியல் துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
ராஜபாளையத்தில் வைல்ட் லைப் அசோசியேஷன் ஆப் ராஜபாளையம், ஜூ அவுட்ரீச் ஆர்கனைசேஷன் இணந்து 'மனிதன் யானை இசைந்து வாழ்தல்' என்ற தலைப்பில் நடந்த பத்திரிகையாளருக்கான கருத்தரங்கில் வார் அமைப்பின் நிறுவனர் டி.எஸ் சுப்ரமணிய ராஜா வரவேற்றார்.
கருத்தரங்கில் ஊட்டி, அரசு கலைக் கல்லுாரி வனஉயிரியல் துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:
நிலத்தில் வாழும் உயிரினங்களில் பெரியதும், நுண்ணறிவுடன் கூடிய, சமூக விலங்கு யானையாகும். வயது முதிர்ந்த பெண் யானைக்கு கூட்டத்தில் அதிக மதிப்பு உண்டு. உணவு கிடைக்கும் இடம், பிரச்சனை அற்ற பாதை போன்ற முடிவுகளை இவை மேற்கொள்ளும்.
வருடம் ஒருமுறை யானைகளுக்கு மதம் பிடிப்பது இயல்பான உடல்நிலையை காட்டுகிறது. இவற்றின் குடல் செரிமானத்தில் வெளியேறும் கழிவிலிலிருந்து முளைப்பு திறன் அதிகரித்த 4000 விதைகள் வெவ்வேறு வனப்பகுதிகளில் பரவ காரணமாகிறது. மேலும் கழிவிலிருந்து மீன், பறவை, பட்டாம்பூச்சி, கரடி என பல்வேறு உயிரினங்களுக்கு உணவாக அமைகிறது.
நல்ல காடுகள்தான் ஆறுகளை உருவாக்க முடியும். காடுகள் உருவாக யானைகள் அவசியம். உயிர் பன்மையுள்ள காடுகளை யானைகளால் மட்டுமே உருவாக்க முடியும், என்றார்.
பி எஸ் ஜி கலைக்கல்லுாரி தொடர்பில் துறை துறைத்தலைவர் ஜெயபிரகாஷ் பேசுகையில்: உலகில் 20 லட்சம் உயிரனங்கள் உள்ளவற்றில் மனிதனைத் தவிர மற்ற அனைத்து உயிரினங்களுக்கும் முரண்பாடுகளால் பாதிப்பு உள்ளது. பெரும்பாலும் மலையோரங்களில் கட்டடங்களாக மாறி விட்டது.
காடு அப்படியேதான் உள்ளது. அதன் இடையே போடும் ரோடு காட்டை முற்றிலும் துண்டாட படும்போது யானைகள் வாழ்விடம் கேள்விக்குறியாகி மோதலாக மாறி அவற்றின் மர்ம சாவுகளாக தொடர்கின்றன.
யானை மனித மோதல்களுக்கான காரணங்களையும் ஆராய்ந்து ஆவணப்படுத்தி அதன் தீர்வுகளை நோக்கியே நமது பயணம் இருக்க வேண்டும்., என்றார்.
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புஷ்பவனம் கூறுகையில்: பத்திரிக்கை செய்திகள் மூலம் கடல்பசு சரணாலயம் மன்னார் வளைகுடா அருகிலும், கடலுார் திண்டுக்கல் மாவட்டங்களில் தேவாங்கு சரணாலயம், யானைகள் வழித்தடங்கள் பற்றிய முக்கியதீர்ப்புகள் வர காரணம், என்றார்.
பூச்சியியல் ஆராய்ச்சியாளர் டேனியல் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஜூ அவுட்ரீச் திட்ட மேலாளர் மாரிமுத்து செய்திருந்தார்.