/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டையில் மீண்டும் ஆக்கிரமிப்பு
/
அருப்புக்கோட்டையில் மீண்டும் ஆக்கிரமிப்பு
ADDED : மே 29, 2025 01:37 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் சில மாதங்களுக்கு முன்பு கண் துடைப்பிற்காக ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் பேருக்கு நெடுஞ்சாலை துறை, நகராட்சி அகற்றியதில், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு 15 ஆண்டுகள் ஆன நிலையில், பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவிக்கவே 7 மாதங்களுக்கு முன்பு, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இதில் நெடுஞ்சாலை, நகராட்சி, வருவாய் துறை, போலீசார் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். நிரந்தர ஆக்கிரமிப்புகள் 2வது கட்டமாக அகற்றப்படும் என கூறினர். அத்துடன் எந்த பணியும் நடக்கவில்லை ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். மக்கள் பழையபடி அல்லல் பட்டு வருகின்றனர்.
நகராட்சிக்கு கட்டுப்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. நகர் முழுவதும் முக்கியமான சந்திப்புகளில் மெகா பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. தெருக்களில் படிக்கட்டுகள், வாறுகால் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. ஆரம்பத்திலேயே இதை தடுக்க வேண்டிய நகராட்சி நகர அமைப்பு பிரிவு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
தற்போது நகரில் பாதாள சாக்கடை திட்டம் புறநகர் பகுதிகளில் நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் டவுன் பகுதிகளில் நடைபெறும்.
அதற்குள் தெருக்கள், முக்கியமான ரோடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தான் பணிகள் செய்ய வசதியாக இருக்கும். இல்லை எனில் பாதாள சாக்கடை திட்டம் இந்த பகுதிகளில் அமைப்பதில் சிக்கல் ஏற்படும். நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருச்சுழி ரோடு, பந்தல்குடி ரோடு, மதுரை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன.
அரசியல் தலையீடு அதிகமாக இருப்பதால் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்ற முடியவில்லை என அதிகாரிகள் பதில் கூறி தப்பித்து விடுகின்றனர். மாவட்ட நிர்வாகம் தான் நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடன அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-