/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பார்க்கிங் கட்டணம் வசூல் செய்வதில் அறநிலையத்துறை, வனத்துறை மோதல்
/
பார்க்கிங் கட்டணம் வசூல் செய்வதில் அறநிலையத்துறை, வனத்துறை மோதல்
பார்க்கிங் கட்டணம் வசூல் செய்வதில் அறநிலையத்துறை, வனத்துறை மோதல்
பார்க்கிங் கட்டணம் வசூல் செய்வதில் அறநிலையத்துறை, வனத்துறை மோதல்
ADDED : ஜன 07, 2024 04:02 AM
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பிற்கு வரும் பக்தர்களிடம் வாகன பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யும் உரிமம் அறநிலையத்துறை சார்பில் தனியாருக்கு ஏலம் விடப்பட்டுள்ள நிலையில், கலெக்டரின் உத்தரவை காரணம் கூறி வனத்துறை வசூலிக்க முற்படுவதற்கு ஆண்டாள் கோவில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான காட்டழகர், பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன் கோயில்கள் உள்ளன. இங்கு வரும் பக்தர்களிடம் ஆண்டாள் கோவில் சார்பில் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் பொது ஏலம் விடப்பட்டு, தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையும், பக்தர்கள் செல்லும் பாதை தங்களுக்கு உரியது எனக்கூறி, நபர் ஒருவருக்கு ரூ. 20 வீதம் நுழைவு கட்டணம் வசூலிக்க துவங்கியது. இதனால் ஒரே இடத்திற்கு அறநிலையத் துறையும், வனத்துறையும் கட்டணம் வசூலிப்பதால் பக்தர்கள் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகினர்.
ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வனத்துறை கட்டணம் வசூலிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் வழக்கம்போல் கடந்த ஆண்டு பொது ஏலம் விடப்பட்டு, 2023 ஜூலை 1 முதல் 2024 ஜூன் 30 வரை பார்க்கிங் கட்டணம் வசூலிக்க சீனிவாசன் என்பவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் கடந்த ஆண்டு நடந்த சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல கண்காணிப்பு குழு கூட்டத்தில், நுழைவு கட்டணம் ரூ.20ஐ வனத்துறையின் சூழல் மேம்பாட்டு குழு, முழு அளவில் வசூலித்து எடுத்துக் கொள்ளவும், சைக்கிள், டூவீலர், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களுக்கு வசூலிக்கும் பார்க்கிங் கட்டணத்தில் 60 சதவீதத்தை அறநிலையத்துறையும், 40 சதவீதத்தை வனத்துறையும் பங்கு போட்டு பிரித்துக் கொள்ள முடிவு செய்து உத்திரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடப்பாண்டு ஜூன் 30 வரை கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஏலம் எடுத்த சீனிவாசன் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் காலம் இருக்கும் நிலையில், நேற்று முதல் தாங்களே வசூலிக்க இருப்பதாக வனத்துறை சார்பில் கோயில் நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஆண்டாள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சர்ச்சை எழுந்த நிலையில் நேற்று காலை செண்பகத் தோப்பில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார், ஆண்டாள் கோயில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து விருதுநகர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் சரவண துரைராஜா கூறுகையில்,
இரண்டு அரசுத்துறைகளின் சார்பில் எவ்வித அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு வசதிகளும் செய்யப்படாத நிலையில் பண வசூல் மட்டுமே குறிக்கோளாக கொண்டு போட்டி போட்டு கட்டணம் வசூலிப்பது ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களிடம் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
வனப்பகுதியில் சமூக விரோதிகள் சர்வ சாதாரணமாக சென்று வருவதும், வனவிலங்கு வேட்டை ஆடப்படுவதும் நடந்து வரும் நிலையில் அதனை தடுக்காத வனத்துறை, ஹிந்து பக்தர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்படுவதை கண்டிக்கிறோம். நுழைவு கட்டண வசூலிப்பை கைவிடாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார்.