/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் பதித்து 4 மாதமாகியும் தண்ணீர் வரவில்லை
/
குழாய் பதித்து 4 மாதமாகியும் தண்ணீர் வரவில்லை
ADDED : மார் 19, 2024 05:39 AM
திருச்சுழி : திருச்சுழி அருகே தும்முசின்னம்பட்டி கிராமத்தில் குடிநீர் பகிர்மான குழாய்கள் பதித்து 4 மாதங்கள் ஆகியும் தண்ணீர் வரவில்லை. இதற்காக தோண்டப்பட்ட ரோடுகளும் சரி செய்யாததால் மக்கள் சிரமமப்பட்டு வருகின்றனர்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது தும்முசின்னம்பட்டி. சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மக்கள் நிலத்தடி நீரை குடிக்க பயன்படுத்தி வந்தனர். இந்த நீரினால் பலருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டது. இந்தப் பகுதியில் ஆய்வு செய்த அதிகாரிகள் தண்ணீர் பிரச்சனையினால் தான் பெரும்பாலான கிராம மக்களுக்கு சிறுநீரக பிரச்சனை வருகிறது என ஆய்வில் கூறினர்.
பின்னர் மக்கள் அனைவரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்தி வந்தனர். ஆனாலும் அதிக விலை கொடுத்து குடிநீரை மக்களால் வாங்க இயலவில்லை. இதை கருத்தில் கொண்டு தும்முசின்னம்பட்டி ஊராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
இது போதுமானதாக இல்லாததால் ஜல்ஜீவன் திட்டத்தில் 356 குடிநீர் இணைப்புகளுக்காக பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டது. ஆனால் பதிக்கப்பட்ட குழாய்கள் தரமற்று உள்ளதாகவும், அரைகுறை பணி செய்திருப்பதாகவும், குடியிருப்புகளே இல்லாத இடத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டு இருப்பதாகவும் மக்கள் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் : ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய்கள் அமைக்க ரூபாய் ஆயிரம் டெபாசிட் செலுத்தி இணைப்பு பெற்றோம். 3 மாதங்களாகியும் தண்ணீர் வரவில்லை. பல இடங்களில் தரமற்ற குழாய்கள் பதித்ததால் உடைந்து சேதமடைந்து விட்டது.
குழாய்கள் பதிப்பதற்காக புதியதாக போடப்பட்ட பேவர் பிளாக் ரோட்டை தோண்டி போட்டுள்ளனர். அதையும் சரி செய்யவில்லை. ஊரில் சிறுநீரகப் பிரச்சனை பலருக்கு இருப்பதால் நல்ல குடிநீர் கிடைக்கும் என நம்பி இருந்தோம். ஆனால் தரமற்ற பணிகளால் குடிநீர் வருவது கேள்விக்குறியாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

