/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பேரூராட்சிகளை இணைத்து வத்திராயிருப்பு நகராட்சியாக்க எதிர்பார்ப்பு: அடிப்படை வசதி, வளர்ச்சி திட்டங்களுக்காக மக்கள் ஏக்கம்

ADDED : பிப் 15, 2024 04:43 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிலிருந்து பிரிக்கப்பட்டு நத்தம்பட்டி, கோட்டையூர், வத்திராயிருப்பு ஆகிய மூன்று வருவாய் வட்டங்கள் மற்றும் 23 வருவாய் கிராமங்களை இணைத்து 2019 பிப்ரவரி 19ல் வத்திராயிருப்பு தனி தாலுகாவாக உருவாக்கப்பட்டது.
இதனையடுத்து வத்திராயிருப்பு மக்கள் நேரடியாக பயனடைய வசதியாக அரசு போக்குவரத்து கழக டிப்போ உருவாக்கப்பட்டு பஸ்கள் இயங்கி வருகிறது. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கி வரும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.1. விரைவில் வத்திராயிருப்பில் துவக்கப்பட உள்ளது.
விரைவில் கூமாபட்டி, வத்திராயிருப்பு, கிருஷ்ணன் கோயில், நத்தம்பட்டி ஆகிய நான்கு போலீஸ் ஸ்டேஷன்களை இணைத்து புதிய டி.எஸ்.பி. அலுவலகமும் உருவாக வாய்ப்புள்ளது. தற்போது இத்தாலுகாவில் ஒரு ஊராட்சி ஒன்றியம், 27 ஊராட்சிகள்,4 பேரூராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் ஒரு லட்சத்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
ஆனாலும், நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் வத்திராயிருப்பு தாலுகாவில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளாட்சி நிர்வாகத்தின் சார்பில் செய்து தரப்படவில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் முறையான வாறுகால், ரோடு, குடிநீர் இணைப்பு, மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை.
இத்தாலுகாவில் முழுக்க முழுக்க விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இருப்பதால் போதிய வரி வருவாய் இல்லாமல் உள்ளாட்சி அமைப்புகள் வளர்ச்சி பணிகள் செய்ய முடியாமல் தவித்து வருகின்றன. பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதால் வரிவருவாய் வசூலிக்க கூட முடியவில்லை. வருவாயை பெருக்கி வளர்ச்சி திட்டங்கள் செய்ய முடியாத சூழல் உள்ளது.
எனவே, வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள 27 ஊராட்சிகள் கொண்ட ஒன்றியத்தையும், 4 பேரூராட்சிகளையும் ஒருங்கிணைத்து வத்திராயிருப்பு நகராட்சியாக ஒரே உள்ளாட்சி அமைப்பு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தால் மட்டுமே எதிர்காலத்தில் போதிய அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். இதற்கு வத்திராயிருப்பு நகராட்சி உருவாக்குவது அவசியம் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.