/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இட நெருக்கடியில் இயங்கும் தீயணைப்பு நிலையம்; வெம்பக்கோட்டையில் புதிய கட்டடம் கட்ட எதிர்பார்ப்பு
/
இட நெருக்கடியில் இயங்கும் தீயணைப்பு நிலையம்; வெம்பக்கோட்டையில் புதிய கட்டடம் கட்ட எதிர்பார்ப்பு
இட நெருக்கடியில் இயங்கும் தீயணைப்பு நிலையம்; வெம்பக்கோட்டையில் புதிய கட்டடம் கட்ட எதிர்பார்ப்பு
இட நெருக்கடியில் இயங்கும் தீயணைப்பு நிலையம்; வெம்பக்கோட்டையில் புதிய கட்டடம் கட்ட எதிர்பார்ப்பு
ADDED : நவ 20, 2025 03:40 AM
சிவகாசி: வெம்பக்கோட்டையில் ஏழு ஆண்டுகளாக இட நெருக்கடியில் தீயணைப்பு நிலையம் செயல்படுவதால் தீயணைப்பு வீரர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக புதிய கட்டடம் கட்ட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
வெம்பக்கோட்டை, விஜய கரிசல்குளம் துலுக்கன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. இப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் எப்போதாவது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் சிவகாசி, சாத்துார் தீயணைப்பு நிலையத்திலிருந்து மீட்பு பணிக்கு செல்வர்.
இதனால் காலதாமதம் ஏற்பட்டதால் பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகு 2018 ல் வெம்பக்கோட்டையை மையமாகக் கொண்டு தீயணைப்பு நிலையம் துவக்கப்பட்டது. இதற்காக வெம்பக்கோட்டை யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள இரு கட்டடங்கள் ஒதுக்கப்பட்டது.
ஒரு கட்டடம் அலுவலகமாகவும் மற்றொரு கட்டடம் வீரர்களின் ஓய்வு அறையாகவும் பயன்படுகிறது. இங்கு நிலைய அலுவலர் உட்பட 17 பேர் பணிபுரிகின்றனர். இரு அறைகளுமே மிகவும் சிறியதாக இருப்பதால் அனைவருமே சிரமப்படுகின்றனர். மேலும் தீயணைப்பு வாகனத்தை நிறுத்தி எடுப்பதற்கும் போதுமான இடவசதி இல்லை.
இதனைத் தொடர்ந்து வெம்பக்கோட்டை விவசாய அலுவலகம் அருகே ஒரு ஆண்டுக்கு முன்பு தீயணைப்பு நிலையத்துக்கு என புதிய கட்டடம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதற்கடுத்த பணிகள் எதுவுமே துவங்கவில்லை. இதனால் தற்போது வரை தீயணைப்பு நிலையம் இட நெருக்கடியிலேயே இயங்குகின்றது. பணி புரியும் வீரர்கள் ஓய்வு எடுக்க வழியின்றி மிகவும் சிரமப்படுகின்றனர்.
பேரிடர் காலங்களில் அனைவரும் இங்கேயே தங்குவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

