/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊரகப் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு தரும் வேகத்தடைகளை அகற்ற எதிர்பார்ப்பு
/
ஊரகப் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு தரும் வேகத்தடைகளை அகற்ற எதிர்பார்ப்பு
ஊரகப் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு தரும் வேகத்தடைகளை அகற்ற எதிர்பார்ப்பு
ஊரகப் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு தரும் வேகத்தடைகளை அகற்ற எதிர்பார்ப்பு
ADDED : அக் 10, 2024 06:56 AM
சாத்துார் : சாத்துார், வெம்பக்கோட்டை ஒன்றிய கிராமங்களில் போக்குவரத்துக்கு தடையாக வேகத்தடைகள் பல உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சாத்துார்- தாயில்பட்டி வழி வெம்பக்கோட்டை ரோடு, சாத்துார் - ஏழாயிரம்பண்ணை ரோடு, சாத்துார் - சூரங்குடி வழி வெம்பக்கோட்டை ரோடுகளில் கிராமங்கள் தோறும் ஒன்றுக்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வேகத்தடைகளில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கண்டு கொள்ளும் வகையில் இரவில் மிளிரும் எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்படவில்லை. மேலும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து நுாறு மீட்டருக்கு முன்னால் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். எச்சரிக்கை பலகையும் அமைக்கப்படவில்லை.
இதனால் இரவு நேரத்தில் அதிவேகமாக டூவீலர்களில் செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அவற்றில் ஏற்றி நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்.
வேகத்தடை இருப்பது கண்களுக்கு தெரியாத நிலையில் நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி ரோட்டில் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் வாகனத்தை விட்டு கவிழ்ந்து விபத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது.
சாத்துார், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களில் அதிக அளவில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து நேரிடும் போது மீட்பு பணிக்காக செல்லும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து செல்ல முடியாத வகையில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் மிகுந்த தடையாக உள்ளன.
மேலும் இந்த சாலைகளில் விபத்து நேரிடும் போது விபத்திற்கு உள்ளாகும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை சிகிச்சைக்காக அழைத்து வரும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் வேகத்தடைகளால் பாதிக்கப்படுகின்றன.
விபத்தில் காயம் அடைந்தவர்களை ஒரு சில நிமிடங்களில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை அளித்தால் அவர்களது உயிர்கள் காக்கப்படும் நிலை உள்ள நிலையில் வேகத்தடைகளால் ஆம்புலன்ஸ்கள் உரிய வேகத்தில் சென்று காயமடைந்தவர்களை சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்க முடியாத நிலை உள்ளது.
ஒவ்வொரு ஊருக்கும் ஒன்று முதல் மூன்று வேகத்தடைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் விபத்துக்கள் நேரிடுவதை தடுப்பதற்காக வேகத்தடைகள் அமைக்கப்படுகின்றன.
ஆனால் அவசியமற்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதோடு உயிர்கள் பலியாவதும் தொடர்கதையாக உள்ளது. சாத்துார் மற்றும் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் அதிக அளவில் உள்ள வேகத்தடைகளை அகற்றிட நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.