/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போக்குவரத்து கழக தனியார் ஒப்பந்த ஊழியர்களுக்கும் இ.எஸ்.ஐ., பி.எப்., அரசு நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

ADDED : ஆக 12, 2025 03:45 AM
விருதுநகர்: தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் டிரைவர், கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டு பஸ்களில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப்., வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க தினக்கூலியாக டிரைவர், கண்டக்டர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டனர். டிரைவருக்கு ரூ. 700 + படி, கண்டக்டருக்கு ரூ. 690 + படி தினசரி ஊதியமாக வழங்கப்பட்டது. ஆனால் நேரடியாக அரசு போக்குவரத்து கழகங்களில் தொடர்ந்து 240 நாட்கள் பணிபுரிந்தால் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. இதனால் தினக்கூலி டிரைவர்கள், கண்டக்டர்கள் ஒவ்வொரு மண்டலமாக தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்களாக மாற்றப்பட்டனர். மேலும் தேவைக்கு ஏற்ப புதிய பணியாளர்களும் தேர்வு செய்யப்பட்டு பஸ்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். தனியார் ஒப்பந்த நிறுவனம் டிரைவருக்கு ரூ. 872, கண்டக்டருக்கு ரூ. 870 தினசரி ஊதியமாக நிர்ணயித்து மாதத்திற்கு கணக்கீட்டு வழங்குகிறது.
இப்பணியாளர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப்., வழங்க அரசு போக்குவரத்து கழகமும், தனியார் ஒப்பந்த நிறுவனங்களும் தயாராக இல்லை. தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் ஊழியர்களாக பணிபுரிபவர்களுக்கும் இ.எஸ்.ஐ., பி.எப்., வழங்க வேண்டும் என அரசு விதிகளில் உள்ளது. ஆனால் இதுவரை அரசு போக்குவரத்து கழகங்களில் தனியார் ஒப்பந்தத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது.
இவர்களுக்கும் வார விடுப்பு, மாதத்தில் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு, இ.எஸ்.ஐ., பி.எப்., உள்ளிட்டவற்றை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.