/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிருதுமால் நதியில் நிரந்தர ஆயக்கட்டுக்கு எதிர்பார்ப்பு; தரிசுகளாக மாறுவதால் விவசாயிகள் கவலை
/
கிருதுமால் நதியில் நிரந்தர ஆயக்கட்டுக்கு எதிர்பார்ப்பு; தரிசுகளாக மாறுவதால் விவசாயிகள் கவலை
கிருதுமால் நதியில் நிரந்தர ஆயக்கட்டுக்கு எதிர்பார்ப்பு; தரிசுகளாக மாறுவதால் விவசாயிகள் கவலை
கிருதுமால் நதியில் நிரந்தர ஆயக்கட்டுக்கு எதிர்பார்ப்பு; தரிசுகளாக மாறுவதால் விவசாயிகள் கவலை
ADDED : ஜூன் 30, 2025 04:53 AM

வைகை நதியின் கிளை நதியான கிருதுமால் நதி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம் வரை 86 கி.மீ., தூரம் செல்கிறது. நதியின் குறுக்கே அம்பலத்தாடி, ஓடாத்தூர், கட்டணுார், அத்திகுளம், நல்லுக்குறிச்சி, அபிராமம், அம்பலத்தாடி புதிய அணை என 7 அணைக்கட்டுகள் உள்ளன. இதன் மூலம் 73 கணமாய்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. 42 ஆயிரத்து 769 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெருகிறது. ஒருமுறை கண்மாய் நிரம்பினால் போதும், இருபோகம் விவசாயம் செய்தனர்.
குடிநீர், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் பயனுள்ளதாக இருந்தது. 120 அடி அகலத்தில் வற்றாத நதியாக ஓடியது. நாளடைவில் நகருக்குள் பாதாள சாக்கடை கழிவுநீர் விடப்பட்டது. 20 கி.மீ., தூரத்திற்கு ஆக்கிரமிப்புகளால் ஓடையாகி மாறியது. அத்துடன் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. விரகனூர் அணையில் இருந்து ஆயிரம் கன அடி நீர் செல்லும் அளவிற்கு அகலம் இருந்தது.
தற்போது 600 கன அடி நீர செல்லும் அளவிற்கு குறுகியது. கிருதுமால் நதி மீட்டுருவாக்கம், புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 7 கோடியே 36 லட்சம் செலவில், கண்மாய் தூர்வாரி, கால்வாய்கள், கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடந்தன. எதிர்பார்த்த அளவிற்கு புனரமைப்பு பணிகள் நடைபெறவில்லை.
இது ஒரு புறம் இருக்க, ஒவ்வொரு முறையும் வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது, கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்து விட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. நரிக்குடி, திருச்சுழி பகுதி விவசாயிகள் அதிகாரிகளிடத்தில் போராடி ஒவ்வொரு முறையும் தண்ணீர் பெற வேண்டி இருக்கிறது. நிரந்தர ஆயக்கட்டுக்கு அரசாணை வெளியிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனை நிறைவேற்ற அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒவ்வொரு முறையும் போராட வேண்டி இருப்பதால் விவசாயிகள் பலர் விவசாயத்தை கைவிட்டனர். வயல்களில் சீமை கருவேல மரங்கள் முளைத்து தரிசு நிலங்களாகி விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குடிநீர், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அச்சம் எழுந்துள்ளது. இதனால் நிரந்தர ஆயக்கட்டுக்கு அரசாணை வெளியிட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
நரிக்குடி பகுதி பாசன விவசாயிகள் கூறியதாவது: 5 ஆயிரம் கன அடி நீர் செல்ல அகலப்படுத்த வேண்டும். நதியில் உள்ள சீமை கருவேல மரங்களை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும். 1960ம் ஆண்டு செட்டில்மெண்ட் சர்வே அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குப்பைகளை கொட்டுகிற, கழிவு நீரை ஆற்றில் விடுகிற உள்ளாட்சி அமைப்புகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தர ஆயக்கட்டுக்கு அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர்.