/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காவலன் தோழன் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த எதிர்பார்ப்பு....: மாணவர்கள் மத்தியில் போதைப்பொருளை கட்டுப்படுத்த
/
காவலன் தோழன் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த எதிர்பார்ப்பு....: மாணவர்கள் மத்தியில் போதைப்பொருளை கட்டுப்படுத்த
காவலன் தோழன் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த எதிர்பார்ப்பு....: மாணவர்கள் மத்தியில் போதைப்பொருளை கட்டுப்படுத்த
காவலன் தோழன் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த எதிர்பார்ப்பு....: மாணவர்கள் மத்தியில் போதைப்பொருளை கட்டுப்படுத்த
ADDED : ஜூலை 17, 2025 11:42 PM

தமிழக அளவில் குட்கா, கஞ்சா, போதை பாக்குகள் பயன்பாடு பெரும் பிரச்னைகளாக இருந்து வருகின்றன. இது தற்போது படிக்கும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருவதால் கற்பித்தல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு ஒரு தலைமுறையின் படிப்பறிவே மந்தமாக்கப்படும் அபாயத்தை எட்டியுள்ளது. இதன் ஆபத்தை உணர்ந்த அரசு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலங்களை நடத்தி வருகிறது.
அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் போதை எதிர்ப்பு அமைப்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளில் காவலன் தோழி, காவலன் தோழன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஒரு பள்ளிக்கு 15 மாணவர்கள் காவலன் தோழிகளாகவும், தோழர்களாகவும் நியமிக்கப்படுவர். அவர்கள் பள்ளி மாணவர்களில் யாரிடமாவது போதை பயன்பாடு இருந்தால், அதில் இருந்து அவர்கள் வெளிவர மறைமுகமாக உதவுவர். மிகவும் பாதிக்கப்பட்டிருப்பவர்களை கண்டறிந்து அவர்களின் நடவடிக்கை குறித்து தலைமை ஆசிரியருக்கு தெரிவிப்பர்.
மாணவருக்கு தேவையான உளவியல் ஆலோசனை உள்ளிட்ட மருத்துவ வசதிகள் செய்து தரப்படும். 167 பள்ளிகளில் 15 மாணவர்கள் என 2505 மாணவர்கள் காவலன் தோழி, தோழர்களாக கடந்த கல்வியாண்டில் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த திட்டம் இன்றளவும் முழுவீச்சில் செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் இன்னமும் பள்ளிகளுக்கு அருகே போதை வஸ்துக்கள் விற்பனை செய்வோரை கைது செய்வது ஆங்காங்கே நடந்து கொண்டு தான் வருகிறது. இளம் வயதில் அடிமையாவதால் எதிர்காலத்தை தொலைக்கும் அபாயம் ஏற்படுகிறது. காவலன் தோழன், தோழி திட்டத்தை பள்ளிக்கல்வித்துறையினர் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும். அடிக்கடி கண்காணிப்பு செய்து ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும்.
இவ்வாறு தொடர்ச்சியாக செய்தால் மட்டுமே மாணவர்கள் மத்தியில் போதை பரவும் கலாசாரம் முற்றிலும் தடுக்கப்பட வாய்ப்புள்ளது. திருத்தங்கலில் மது போதையில் வந்த மாணவர்கள் ஆசிரியரை மது பாட்டிலால் தாக்கினர். இதுபோன்று அவ்வப்போது ஏற்படுகின்ற அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்கு பள்ளிகளில் காவலன் தோழி, காவலன் தோழன் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.