/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆக்கிரமிப்பின் பிடியில் கண்மாய்களின் வரத்து கால்வாய்கள்
/
ஆக்கிரமிப்பின் பிடியில் கண்மாய்களின் வரத்து கால்வாய்கள்
ஆக்கிரமிப்பின் பிடியில் கண்மாய்களின் வரத்து கால்வாய்கள்
ஆக்கிரமிப்பின் பிடியில் கண்மாய்களின் வரத்து கால்வாய்கள்
ADDED : ஜன 09, 2024 12:49 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பாசன கண்மாய்களின் வரத்து கால்வாய்கள் கருவேல முட்களாலும், புதர்களாலும் சூழ்ந்தும் ஆக்கிரமித்து கிடப்பதால் பயிர்களை சூழ்ந்து மழைநீர் தேங்கி பாழாவதும், குடியிருப்புக்குள் மழைநீர் புகுவதும் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் 2023ல் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்துள்ள நிலையில் 70 சதவீதம் கண்மாய்கள் நிறைந்துள்ளன. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, அருப்புக்கோட்டை, நரிக்குடி, திருச்சுழி ஆகிய பகுதிகளில் பாசன கண்மாய்கள் அதிகளவில் உள்ளன.
இக்கண்மாய்கள் நிறைந்தால் அதை சுற்றியுள்ள விளைநிலங்களின் சாகுபடிக்கு உதவும். சங்கிலித்தொடர் போல் நீர்வரத்து கால்வாய் அமைக்கப்பட்டு அடுத்த ஊர் கண்மாய்க்கும் நீர் கடத்தப்படும். இந்நிலையில் பாசன கண்மாய்கள் பலவற்றின் நீர்வரத்து கால்வாய்கள் கருவேல முட்கள் சூழ்ந்தும், மண் மேவியும், கட்டட ஆக்கிரமிப்புகளிலும் காணாமல் போய் வருகிறது. நேற்று முன்தினம் தளவாய்புரம் புத்துாரில் அரசனேரி கண்மாய் பாசனத்தில் 30 ஏக்கர் பாழானது. இதே போல் சத்திரப்பட்டி வாகைக்குளம்பட்டியில் மழைநீர் புகுந்தது. சிவகாசி பள்ளப்பட்டி நேரு காலனி, விவேகானந்தர் காலனி, முத்துராமலிங்கபுரம் குடியிருப்புகள் கடம்பன் குளம் கண்மாய் நிறைந்ததில் மூழ்கியது. இந்த கண்மாய் நிரம்பினால் ஆலமரத்து பட்டி ரோட்டில் உள்ள புது கண்மாய்க்கு தண்ணீர் செல்லும், ஆனால் கண்மாய்க்கு செல்லும் அனைத்து நீர்வழிப்பாதைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி சிறுகுளம் கண்மாய் தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள சிறுகுளம் காலனிக்குள் புகுந்தது. சிவகாசி அருகே விளாம்பட்டி காமராஜர் காலனியில் ஓடையின் ஆக்கிரமிப்பு காரணமாக கண்மாய் தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்தது. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துாரில் பாசன கண்மாய்கள் பல நிறைந்து செல்ல வழியில்லாததால் தொடர்ந்து மழைநீரை வெளியேற்றி பயிர்களை பாழாக்கி வருகின்றன. இதனால் விவசாயிகள் மிகுந்த மனவேதனையில் இருக்கின்றனர்.
நீர்வரத்து ஓடைகளை பராமரிக்காமல் விட்டதால் அதற்கான பலனை அனுபவித்து கொண்டிருக்கிறோம் என இயற்கை ஆர்வலர்கள் ஒரு பக்கம் கொதிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் பாசன கண்மாய்களை கண்டறிந்து அவற்றின் நீர்வரத்து பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் கனமழை பெய்தால் சென்னையை போல் குடியிருப்பு மூழ்குவதும், விளைநிலங்கள் பாழாவதும் தான் நடக்கும்.