/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கண்மாய்கள் நிரம்பலையே கவலையில் விவசாயிகள்
/
கண்மாய்கள் நிரம்பலையே கவலையில் விவசாயிகள்
ADDED : நவ 12, 2024 04:33 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு தாலுகாவில் 2023 நவம்பர் மாதத்தில் தொடர்ந்து மழை பெய்து கண்மாய்கள் நிரம்பிய நிலையில், இந்த ஆண்டு போதிய மழை இல்லாமல் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு தாலுகாவில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை, மக்காச்சோளம், கரும்பு, மா, தென்னை உட்பட பல்வேறு பயிர்கள் சாகுபடி ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. இதற்குப் பேருதவியாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை தண்ணீர் கண்மாய்களுக்கு வரத்து இருப்பது முக்கிய காரணமாகும்.
பெரும்பாலான வயல்களில் கிணறுகள் உள்ள நிலையில் அதனை நம்பியே விவசாயிகள் பயிர் செய்கின்றனர். இருந்த போதிலும் தொடர் மழை பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பயிர்களுக்கும் தேவையான தண்ணீர் கிடைக்கும் என்பதால் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையை நம்பியே விவசாயிகள் உள்ளனர்.
2023 நவம்பர் மாதத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகாவில் மம்சாபுரத்தில் உள்ள அனைத்து கண்மாய்களும் நிரம்பி ஸ்ரீவில்லிபுத்துார் கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு மறுகால் விழுந்து சிவகாசி தாலுகா கண்மாய்களுக்கும் தண்ணீர் சென்றது.
இதேபோல் வத்திராயிருப்பு தாலுகாவில் பெரியாறு, கோவிலாறு அணைகள் நிரம்பி திறந்து விடப்பட்டதால் வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள அனைத்து கண்மாய்களும் நிரம்பி, சிவகாசி தாலுகா கண்மாய்களுக்கும் தண்ணீர் சென்றது.
ஆனால், இந்த ஆண்டு அதேபோல் போதிய மழை இல்லாததால் ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகாவில் உள்ள அனைத்து கண்மாய்களிலும் மிக மிக குறைந்த அளவு தண்ணீரே உள்ளது. வத்திராயிருப்பு தாலுகாவில் இன்னும் இரண்டு அணைகளும் நிரம்ப வில்லை. இதனால் அப்பகுதி கண்மாய்களும் தண்ணீர் இன்றி காணப்படுகிறது.
கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் எதிர்வரும் நாட்களில் மழை பெய்து அணைகள், கண்மாய்கள் நிரம்புமா என்ற எதிர்பார்ப்புடன் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு தாலுகா விவசாயிகள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.