/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மலையடிவாரத்தில் யானைகள் தாக்குவதை தடுக்க நடவடிக்கை என்ன: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி
/
மலையடிவாரத்தில் யானைகள் தாக்குவதை தடுக்க நடவடிக்கை என்ன: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி
மலையடிவாரத்தில் யானைகள் தாக்குவதை தடுக்க நடவடிக்கை என்ன: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி
மலையடிவாரத்தில் யானைகள் தாக்குவதை தடுக்க நடவடிக்கை என்ன: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி
ADDED : ஜன 20, 2024 04:17 AM

விருதுநகர்: மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் யானைகள் தாக்குவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை என்ன எடுத்துள்ளது என விருதுநகரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குனர் விஜயா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், வேளாண் வணிக துணை இயக்குனர் ரமேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
ராமச்சந்திரராஜா, ராஜபாளையம்: விவசாய கழிவுகளை எரிக்காமல் உரமாக்க மாவட்ட நிர்வாகம் பயோ டீகம்போஸர்களை வழங்க வேண்டும். அதே போல் காட்டு பன்றியை வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்க அரசு அனுப்பிய கடித நகல்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் யானைகள் தாக்குவதை வனத்துறை கட்டுப்படுத்துவதே இல்லை.
ஞானகுரு, மம்சாபுரம்: வனத்துறையினர் பயிர் சேதத்தை பார்க்க நேரில் வருவதே கிடையாது.
ஜெயசீலன், கலெக்டர்: காட்டுப்பன்றி தொடர்பான கடித நகல் வழங்கப்படும். யானைகள் தாக்குவதை தடுக்க வனத்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது தொடர்பான செயல்திட்டத்தை அடுத்த வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேவையான அளவு முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும்.
சிவசாமி, காரியாபட்டி: ட்ரோன் தொழில்நுட்பம் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க செய்ய வேண்டும். தென்னை பயிரில் நோய் தாக்காமல் தடுக்க சத்து டானிக் வழங்க வேண்டும்.
செந்தில்குமார், கூட்டுறவு இணைப்பதிவாளர்: அருப்புக்கோட்டை பாலையம்பட்டி கூட்டுறவு சங்கத்தில் ட்ரோன் வாங்கப்பட்டுள்ளது. அது விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இருளப்பன், வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அம்மையப்பன், சேத்துார்: ராஜபாளையத்தில் கால்நடை மருத்துவமனை வேண்டும்.
கணபதிமாறன், கால்நடை துணை இயக்குனர்: திட்ட வரைவு அனுப்பப்பட்டுள்ளது.
கருப்பையா, ராஜபாளையம்: மாவட்டத்தில் விவசாயிகளுக்கான வண்டிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்படுவதால் பொருட்களை கொண்டு செல்ல முடிவதில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும்.
ராஜேந்திரன், விருதுநகர்: எரிச்சநத்தம் செவலுாரில் பயிர் பாதிப்புகளை எடுக்கவில்லை.
ஜெயசீலன், கலெக்டர்: எங்கெல்லாம் விடுபட்டுள்ளது என மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துங்கள் நேரடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நாச்சியார் அம்மாள், நேர்முக உதவியாளர்: மாவட்டத்தில் டிச. 18, 19ல் பெய்த அதீத கனமழையால் 13 ஆயிரத்து 884 எக்டேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 16 ஆயிரத்து 721 விவசாயிகளுக்கு ரூ.13 கோடியே 91 லட்சத்து 29 ஆயிரத்து 944 இழப்பீடு கோரி அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
குமார், அருப்புக்கோட்டை: கோவிலாங்குளம் தபசு ஊருணியின் வடிகாலை சுத்தம் செய்ய வேண்டும்.
கணேசன், சிவகாசி: ஆனைக்குட்டம் பாசன ஆயக்கட்டு பரப்பில் வாடியூர் கிராமத்தின் 300 ஏக்கருக்கு விவசாய நிலங்களை சேர்க்க வேண்டும். அர்ஜூனா நதியில் பட்டாசு கழிவு கலப்பதை தடுக்க வேண்டும். கன்னிசேரி கண்மாயை துார்வார வேண்டும்.
அழகர்சாமி, திருத்தங்கல்: திருத்தங்கல் பெரியகுளம் கண்மாயில் இருந்து வரும் நீர் இரண்டு பிரிவாக பிரிந்து ஒன்று உறிஞ்சிக்குளம், இன்னொன்று வாடியூர் கண்மாய்க்கு செல்கின்றன. இதன் நீர்வரத்து கால்வாய்களை துார்வார வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.