/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தரமற்ற உலர் களங்களால் விவசாயிகள் சிரமம்!
/
தரமற்ற உலர் களங்களால் விவசாயிகள் சிரமம்!
ADDED : மார் 19, 2024 11:56 PM
மாவட்டம் முழுவதுமம் விவசாயம் நடந்து வருகிறது. பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும் விவசாயிகள் விவசாயத்தை விடாமல் செய்து வருகின்றனர். விளைவித்த பயிர்கள் காட்டுப்பன்றிகள், மான்கள், பறவைகள், ஆகியவை அழித்தது போக மீதமுள்ளவற்றை காப்பாற்றி தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி செய்து கொள்கின்றனர்.
பயிர்களை பயிரிட்டு அறுவடைக்கு பின், பயிர்களை உலர வைக்க களம் அவசியமாகிறது. அறுவடை காலங்களில் பயிர்களில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்க ரோட்டில் பரப்பி அதன்மீது வாகனங்கள் செல்லும் போது கழிவுகள் காற்றில் பறந்து பயிர்கள் மட்டும் கிடைக்கும். கிராமப்புற ரோடுகள் பெரும்பாலானவை உலர்களமாக பயன்படுவதால் போக்குவரத்து இடைஞ்சல் , வாகனங்கள் மோதி விபத்தும் ஏற்படுகிறது.
இதை தவிர்க்கும் வகையில் 1997 ல், ஊராட்சிகளில் உலர் களங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயத்தின் தன்மைக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு களங்கள் உருவாக்கப்பட்டன. களத்தில் விவசாயிகள் தங்கள் பயிர்களை காய வைத்து எடுக்க வசதியாக இருந்தது.
ஆனால், தரமற்ற பணி செய்து களங்களை பயன்படுத்த முடியாத அளவிற்கு செய்து விட்டனர். பெரும்பாலான கிராமங்களில் அமைக்கப்பட்ட உலர் களங்கள் சேதமுற்றும், இடிந்தும் உள்ளன. இன்னும் சில கிரிக்கெட் விளையாடும் மைதானமாக பயன்படுகிறது. விவசாயிகள் பழையபடி தங்கள் பயிர்களை ரோட்டில் கொட்டி கழிவுகளை அப்புறப்படுத்து கின்றனர்.
இதனால் கோடிக்கணக்கான நிதி ஒதுக்கி உலர் களங்கள் அமைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் நிதி வீணானது. விவசாயிகளின் நலன் கருதி ஒவ்வொரு கிராமத்திலும் தரமான முறையில் இரண்டுக்கும் மேற்பட்ட உலர் களங்கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

