/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கண்மாய் உடைந்ததால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் விவசாயிகள் கவலை
/
கண்மாய் உடைந்ததால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் விவசாயிகள் கவலை
கண்மாய் உடைந்ததால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் விவசாயிகள் கவலை
கண்மாய் உடைந்ததால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் விவசாயிகள் கவலை
ADDED : டிச 27, 2024 04:38 AM

நரிக்குடி: நரிக்குடி வடக்கூர் கண்மாய் உடைந்து வயல்களில் தண்ணீர் பாய்ந்ததால் நெற்பயிர்கள் மூழ்கின. அறுவடைக்கு தயாராக இருந்த சமயத்தில் பாதிப்பு ஏற்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
நரிக்குடி களத்தூர் வடக்கூரில் வயல்களில் நெல் நடவு செய்தனர். நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மழை பெய்து, பல்வேறு கண்மாய் களுக்கு நீர் வரத்து ஏற்பட்டது.
கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கூடுதலாக தண்ணீர் வரத்து ஏற்பட்டு, பல்வேறு கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதில் வடக்கூர் கண்மாய் கரை கூடுதல் தண்ணீருக்கு தாக்க பிடிக்க முடியாமல் உடைப்பு ஏற்பட்டு, நீர் வெளியேறி, வயல்களில் புகுந்தது. நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்த விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டதையடுத்து கவலையடைந்தனர்.
விவசாயிகள் கூறியதாவது: இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருக்கும் என நெல் நடவு செய்தோம். ஓரளவுக்கு நல்ல மழை பெய்து, நீர்நிலைகளுக்கு தண்ணீர் வந்தது.
கடன் வாங்கி விவசாயத்தை தொடங்கினோம். ஏக்கருக்கு ரூ . 25 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் வரை செலவானது. அறுவடைக்கு தயாராக இருந்த சமயத்தில் கண்மாய் உடைப்பு ஏற்பட்டு நெற்பயிர்கள் நீரில் மூழ்கி, பாதிப்பை ஏற்படுத்தியது. உடைப்பை சரி செய்ய இதுவரை நடவடிக்கை இல்லை. நாங்களே மணல் மூடைகளை அடுக்கி வைத்து ஓரளவிற்கு கட்டுப்படுத்தினோம். கரை வலுவிழந்து உள்ளது. சீரமைக்க வேண்டும். அதிக பாதிப்பை ஏற்படுத்தியதால் நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.