/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நல்ல விலை கிடைத்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை
/
நல்ல விலை கிடைத்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை
நல்ல விலை கிடைத்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை
நல்ல விலை கிடைத்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை
ADDED : பிப் 14, 2025 06:29 AM

மாவட்டத்தில் சிவகாசி பகுதியில் ஆலமரத்துப்பட்டி, சித்தம நாயக்கன்பட்டி, புதுக்கோட்டை காளையார் கரிசல்குளம், செவலுார், எரிச்சநத்தம், குமிழங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வெம்பக்கோட்டை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, சாத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
உழுதல், பயிரிடுதல்,களை எடுத்தல், உரமிடுதல் என இதுவரையிலும் ஒரு ஏக்கருக்கு ரூ 22,000 வரை விவசாயிகள் செலவழித்துள்ளனர்.
அனைத்து பகுதிகளிலுமே சரியான நேரத்தில் ஓரளவிற்கு மழை பெய்து மக்காச்சோள செடியில் பயிர் வைத்த போது காட்டுப்பன்றிகளால் பெரும்பான்மையான பயிர்கள் சேதமடைந்தது.
காட்டுப்பன்றிகளிடமிருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காக வேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை கூடுதல் செலவில் விவசாயிகள் மேற்கொண்டனர். தொடர்ந்து மக்காச்சோளம் அறுவடைக்கு வந்த நிலையில் படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
தற்போது ஒரு சில இடங்களில் மக்காச்சோள பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றது. அதே சமயத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தும் பயிரில் ஈரப்பதம் இருப்பதால் அறுவடை செய்யவில்லை. இதனால் மேலும் ஒரு வாரம் கடந்த பின்னரே அறுவடை செய்ய முடியும்.
கடந்த காலத்தில் மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2200 முதல் 2250 வரை விலை போனது. ஒரு ஏக்கருக்கு நன்றாக விளைந்தால் 20 குவிண்டால் வரை மக்காச்சோளம் கிடைத்தது. விவசாயிகளுக்கு லாபம் ஏற்பட்டது.
ஆனால் தற்போது காட்டுப்பன்றிகள், படைப்புளு, தாக்குதலால் ஒரு ஏக்கருக்கு 6 முதல் 8 குவிண்டால் வரை மக்காச்சோளம் கிடைப்பதே பெரிது என விவசாயிகள் நினைக்கின்றனர். இதனால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
பொன்ராஜ், பேர் நாயக்கன்பட்டி, ஐந்து ஏக்கரில்மக்காச்சோளம் பயிர்இட்டுள்ளேன். காட்டுப் பன்றிகள், மான்களால் பயிர்கள் அழிந்த நிலையில் படைப்புழு தாக்குதலாலும் பயிர்கள் அழிந்துவிட்டது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் நல்ல விலை கிடைத்தும் விளைச்சல் இல்லாததால் நஷ்டம் ஏற்படும், என்றார்.