/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நான்கு வழிச்சாலைகளில் குறுகலான பாலங்களால் அச்சம்: எச்சரிக்கை பலகை வைப்பது, அகலப்படுத்த எதிர்பார்ப்பு
/
நான்கு வழிச்சாலைகளில் குறுகலான பாலங்களால் அச்சம்: எச்சரிக்கை பலகை வைப்பது, அகலப்படுத்த எதிர்பார்ப்பு
நான்கு வழிச்சாலைகளில் குறுகலான பாலங்களால் அச்சம்: எச்சரிக்கை பலகை வைப்பது, அகலப்படுத்த எதிர்பார்ப்பு
நான்கு வழிச்சாலைகளில் குறுகலான பாலங்களால் அச்சம்: எச்சரிக்கை பலகை வைப்பது, அகலப்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 21, 2025 05:24 AM

காரியாபட்டி:
துாத்துக்குடி, கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் ஆங்காங்கே குறுகலான பாலங்கள் இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் செல்கின்றனர். விபத்தை தடுக்க எச்சரிக்கை பலகை வைப்பதுடன், விரைந்து பாலங்களை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. போக்குவரத்தை சமாளிக்க ரோடு கட்டமைப்புகளை விரிவுபடுத்த, மேம்படுத்த வேண்டிய கட்டாயமாகிறது. இதில் விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ள ரோடு அமைக்கப்பட வேண்டும் என்பது அரசின் கொள்கை.
அப்படிப்பட்ட நிலையில் துாத்துக்குடி, கன்னியாகுமரி முக்கிய ரோடுகள் நான்கு வழி சாலைகளாக மாற்றப்பட்டன. இதில் பெரும்பாலான இடங்களில் பழைய ரோடுகளில் இருந்த குறுகலான பாலங்களை மாற்றி அமைக்காமல் அப்படியே பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். விருதுநகர் மாவட்டத்திற்குள் உள்ள நான்கு வழிச்சாலையில், துாத்துக்குடி ரோட்டில் வாழ்வாங்கி, எப்போதும்வென்றான், கன்னியாகுமரி ரோட்டில் வெங்கடாசலபுரம், உப்போடை நதி மேம்பாலம், வைப்பாறு மேம்பாலம், நடுவப்பட்டி விலக்கு பாலம், ஆர்.ஆர். நகர், என பல்வேறு இடங்களில் இரு வழி மார்க்கத்திலும் குறுகலான பழைய பாலங்கள் உள்ளன.
அதிவேகமாக வருவதால், குறுகலான பாலங்களின் அருகில் வந்ததும் விபத்து அச்சம் ஏற்படுகிறது. பல சமயங்களில் விலகி செல்ல வழியின்றி விபத்து நடந்து வருகிறது. பொதுவாக விபத்து ஏற்படும் பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.
ஆபத்தான, வளைவான, குறுகலான இடங்களில் பெரும்பாலும் எச்சரிக்கை பலகை கிடையாது. அப்படியே இருந்தாலும் நாளடைவில் இயற்கை சீற்றங்களால் கீழே விழுகின்றன. இதனை உடனடியாக சீரமைக்காததால், விபத்து நடப்பது தொடர் கதையாக இருந்து வருகிறது.
கன்னியாகுமரி ரோட்டில் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தாலும் பாலங்களை மாற்றும் திட்டம் இன்னும் கொண்டு வரவில்லை. அதேபோல் துாத்துக்குடி ரோட்டில் போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. ரோடு சீரமைக்கவே பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டி இருக்கிறது.
இதில் குறுகலான பாலங்களை எப்படி மாற்றுவர் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப ரோடு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம். விபத்தை தடுக்க எச்சரிக்கை பலகை வைப்பதுடன், குறுகலான பாலங்களை அகலப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.