ADDED : செப் 25, 2025 04:52 AM

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீயினை அணைக்கும் பணியில் நேற்று மாலை வரை வனத்துறையினர் ஈடுபட்டனர்.
செண்பகத் தோப்பு அழகர் கோயில் பீட் வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு நீண்ட நேர்கோட்டில் தீப்பிடித்து எரிந்தது. வனச்சரகர் செல்வமணி தலைமையில் ஒரு பிரிவு வனத்துறையினர் அழகர் கோவில் வழியாகவும், மற்றொரு பிரிவினர் கான்சாபுரம் வழியாகவும் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை வரை மலைப்பகுதியில் தீயினால் ஏற்பட்ட புகைமூட்டம் காணப்பட்டது. தொடர்ந்து கூடுதல் வனத்துறையினர் அனுப்பப்பட்டு முற்றிலுமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
புலிகள் காப்பகத் துணை இயக்குனர் முருகன் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் தீப்பிடித்திருக்க வாய்ப்புள்ளது. அழகர் கோயில் வழியாகவும், கான்சாபுரம் வழியாகவும் இரு குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பெரும்பாலும் தீ அணைக்கப்பட்டு விட்டது. தீ பிடித்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.