ADDED : ஆக 20, 2025 07:24 AM
சிவகாசி; சிவகாசியில் ஒருபுறம் தொடரும் பட்டாசு ஆலை விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் மறு பக்கம் அடிக்கடி நடக்கும் கொலைகளால் பட்டாசு நகரான சிவகாசி கொலை நகராக மாறுகிறதா என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி ரிசர்வ்லைன் நேருஜி நகரைச் சேர்ந்த வெள்ளைச்சாமியின் மூத்த மகன் ஈஸ்வரபாண்டியன் 2023 ல் முன் விரோதத்தில் அதே பகுதியை சேர்ந்த கோகுல்குமார் உள்ளிட்டோரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கிய சாட்சியான ஈஸ்வர பாண்டியனின் தம்பி கணேஷ்பாண்டியை 21, ஆக. 12ல் கோகுல்குமார் கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தார்.
அடுத்ததாக எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த தர்மராஜ் 22, முன் விரோதத்தில் கொலை செய்யப்பட்டு அர்ஜுனா நதி பாலத்தின் அடியில் சாக்கு மூட்டையில் வீசப்பட்டிருந்தார். கொலை நடந்து மூன்று நாட்களுக்கு பின்பு ஆக. 13 ல் போலீசார் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து அவரை கொலை செய்த தினேஷ் பாபுவை கைது செய்தனர்.
சிவகாசி மருது பாண்டியர் மேட்டு தெருவை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் 28, முன்விரோதத்தில் பத்து நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு திருத்தங்கல் செங்குளம் கண்மாயின் அருகே புதைக்கப்பட்ட நிலையில் ஆக. 15 ல் கண்டுபிடிக்கப்பட்டார். இந்தக் கொலையும் முன் விரோதத்தில் நடந்த நிலையில் கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர்.
அனைத்து கொலைகளிலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் கொலைகளை தடுக்க முடியவில்லை. ஈஸ்வர பாண்டியன் கொலை வழக்கில் அவரது தம்பி கணேஷ் பாண்டி பழிக்கு பழியாக கோகுல் குமாரை கொலை செய்யலாம் என யூகித்த போலீசார் கோகுல் குமாரை வெளியூருக்கு அனுப்பி வைத்திருந்தனர். ஆனால் சிவகாசி வந்த கோகுல் குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து கணேஷ் குமாரை கொலை செய்தார்.
இதேபோல் மற்ற இரு கொலைகளில் முன் விரோதத்தில் ஏற்கனவே தகராறு நடந்து போலீஸ் ஸ்டேஷனில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கடுத்த சில நாட்களிலேயே கொலை நடந்துள்ளது. இதனை போலீசார் தீவிரமாக கண்காணித்து இருந்தால் தடுத்து இருக்கலாம் என மக்கள் நினைக்கின்றனர். மொத்தத்தில் பட்டாசு நகரம் கொஞ்சம் கொஞ்சமாக கொலை நகரமாக மாறிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
23 சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் கைது இதுகுறித்து டி.எஸ்.பி பாஸ்கர் கூறுகையில்: சிவகாசியில் சமீபத்தில் நடந்த கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், சம்பவம் நடந்த அன்றே கைது செய்யப்பட்டு விட்டனர். குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு ரோந்து பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், கொலை, கொலை முயற்சி வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வந்தவர்கள் என 23 சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், என்றார்.