/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு உற்பத்தி பணி; சிவகாசியில் இன்றுடன் நிறைவு
/
பட்டாசு உற்பத்தி பணி; சிவகாசியில் இன்றுடன் நிறைவு
ADDED : அக் 29, 2024 06:53 AM

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் இந்தாண்டு தீபாவளிக்காக பட்டாசு ஆலைகளில் நடந்த உற்பத்தி பணி நிறைவுற்றது.
இம்மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. 2500 க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. ஏற்கனவே பெய்த மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இத்தீபாவளிக்கு பட்டாசு உற்பத்தி சதவீதம் குறைந்தது. மக்கள் விரும்பும் வெரைட்டி பட்டாசுகளை உற்பத்தி செய்யவும் முடியவில்லை. ஆனாலும் பட்டாசு உற்பத்தி பணி தீவிரமாக நடந்தது.
2023 தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் 2024 தீபாவளிக்கான பட்டாசு உற்பத்தி பணி ஆலைகளில் துவங்கியது. தொடர்ந்து ஓராண்டாக பட்டாசு உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் இன்றுடன் உற்பத்தி பணி நிறைவடைந்தது. பொதுவாக தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பு வரை பட்டாசு உற்பத்தி பணி தொடர்ந்து நடக்கும். இப்பகுதியில் அவ்வப்போது விட்டு விட்டு பெய்த மழையால் ஒரு சில பட்டாசு ஆலைகள் ஒரு வாரத்திற்கு முன்பே மூடப்பட்டது. மீதமுள்ள பட்டாசு ஆலைகளில் பெரும்பான்மையானவை நேற்றுடன் உற்பத்தி பணியை நிறுத்தின. இன்று அனைத்து பட்டாசு ஆலைகளும் முழுமையாக மூடப்பட்டு உற்பத்தி நிறுத்தப்படும். தொடர்ந்து தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும். தீபாவளி முடிந்து ஒரு வாரத்திற்கு பின் 2025 ஆண்டுக்கான பட்டாசு உற்பத்தி துவங்கும்.