/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மேற்குத்தொடர்ச்சி மலையில் மழையால் வெள்ளப்பெருக்கு
/
மேற்குத்தொடர்ச்சி மலையில் மழையால் வெள்ளப்பெருக்கு
ADDED : நவ 04, 2024 03:55 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் மலையடிவார சுற்றுலா இடங்களுக்கு மக்கள் செல்ல அனுமதி இல்லை என ஸ்ரீவில்லிபுத்துார் புலிகள் காப்பகம் அறிவித்துள்ளது.
இம்மாவட்டத்தில் தேவதானம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, சதுரகிரி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இரண்டு வாரங்களுக்கு மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
நீர்வரத்து ஓடைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
கடந்த 4 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை திடீர் கனமழை பெய்து வரும் நிலையில், தீபாவளி விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் தேவதானம் சாஸ்தா கோயில், ராஜபாளையம் அய்யனார் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ராக்காச்சி அம்மன் கோயில் மற்றும் செண்பகத் தோப்பு பேச்சி அம்மன் கோயில் பகுதியில் உள்ள நீர்வரத்து ஓடைகளில் குளிக்க அதிகளவில் செல்கின்றனர்.
இரு நாட்களுக்கு முன்பு ராக்காச்சி அம்மன் கோயில் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்கு குளித்த 150 பேர் வெளியில் வர முடியாமல் தவித்தனர். நேற்று முன் தினமும் அய்யனார் கோயில் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்கு குளித்தவர்களும் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மற்றும் வனத்துறையினர் சென்று அவர்களை மீட்டனர்.
இந்நிலையில் ஆறுகள் மற்றும் நீர்வரத்து ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் கனமழை பெய்யும் சூழல் இருந்ததால் செண்பகத்தோப்பு, ராக்காச்சி அம்மன் கோயில், அய்யனார் கோயில், சதுரகிரி தாணிப்பாறை உட்பட அனைத்து மலையடிவார சுற்றுலா இடங்களுக்கு மக்கள் செல்ல அனுமதியில்லை என புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்தார்.