/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கண்களை கூசச்செய்யும் வாகன விளக்குகள்
/
கண்களை கூசச்செய்யும் வாகன விளக்குகள்
ADDED : டிச 28, 2025 05:49 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் நகர் பகுதியில் ஏற்படும் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் கண்கூச செய்யும் வாகன விளக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையத்தில் டூவீலர்கள் முதல் அனைத்து வாகனங்களிலும் கண்களை கூசச் செய்யும் நவீனரக எல்.இ.டி பல்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அதிக அளவில் ஒளி தரக்கூடியவையாக உள்ளன. இதனால் எதிரில் வருபவர்களுக்கு முன்னால் வரும் வாகனங்கள் டூவீலர் அல்லது கனரக வாகனங்களா என தெரியாத வகையில் தடுமாற்றம் ஏற்படுகிறது.
ஏற்கனவே போக்குவரத்து விதிகளின் படி நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்களை இயக்கும்போது குறைந்த பட்ச ஒளி விளக்கு எனும் 'லோ பீம்' உபயோகிக்க வேண்டும் என்ற விதி இருந்தும் யாரும் பின்பற்றுவதில்லை. அதிகபட்ச ஒளி விளக்குகளை எறிய விட்டு வாகனங்களை இயக்குகின்றனர். இவற்றை போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் கண்டு கொள்வதில்லை.
திடீரென அதிக ஒளி கண்ணில் படும்போது பார்வை ஸ்தம்பித்து முடிவெடுப்பதற்குள் விபத்து ஏற்படுவது உடன், தொடர்ந்து எதிர்கொள்ளும் இத்தகைய ஒளியால் விழித்திரை பாதித்து பார்வை திறன் குறைகிறது.
சாலை விதிகளுக்கு அக்கறை கொடுக்கும் போக்குவரத்து போலீசார், அதிக ஒளி ஊமிழும் விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் குறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

