/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பொதுப்பிரிவினருக்கும் தாலிக்கு தங்கம்காத்திருப்பு
/
பொதுப்பிரிவினருக்கும் தாலிக்கு தங்கம்காத்திருப்பு
ADDED : பிப் 14, 2024 05:55 AM
தமிழக அரசு ஈ.வே.ரா., மணியம்மை திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அன்னை தெரசா, டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் ஆகியோர் பெயரில் திருமண நிதி உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டங்கள் ஆதரவற்றோர், கலப்புத் திருமணம், விதைவை மகள், மறு திருமணம் ஆகிய சிறப்பு பிரிவினருக்கு மட்டும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பொது பிரிவினருக்கான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தில் பயனாளிகள் அதிகமாக இருப்பதால் இந்தத் திட்டத்தை அரசு நிறுத்தி வைத்துவிட்டது.
ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு அரசு 1 பவுன் தங்கம், அத்துடன் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 50 ஆயிரம், அதற்கு கீழ் படித்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. விருதுநகர் மாவட்டத்தில் 2023, மார்ச் 8 வரை தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயனாளிகள் பயன் பெற்றனர். அதன் பின் மார்ச் 9 ம் தேதியிலிருந்து இந்த திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது.
இதிலிருந்து மாவட்டம் முழுவதும் இந்த திட்டத்தில் மனுக்கள் கொடுத்திருந்த 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏழை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அருப்புக்கோட்டையில் ஜனவரியில் நடந்த, 9 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த சிறப்பு பிரிவினருக்கு மட்டும் தாலிக்கு தங்கம், பணம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர், கலெக்டர் கலந்து கொண்டனர்.
இதில், பொது பிரிவினருக்கான மனு செய்திருந்த ஏழை பெண்கள் எங்களுக்கு இந்த திட்டத்தில் அரசு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்த போது, போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி விட்டனர். சமுக நல துறை அலுவலர்களை தொடர்ந்து பயனாளிகள் கேட்டு வருகின்றனர்.
இந்த திட்டத்தை அரசு நிறுத்தி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டம் என்ற பெயரில், அரசு பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்த பெண் குழந்தைகளுக்கு, அவர்கள் கல்லூரியில் சேர்ந்து படித்தால் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
தாலிக்கு தங்கம் திட்டத்தை அரசு ரத்து செய்ததால் ஏழை மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். ஏழை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திருமண செலவுக்கு செலவிட முடியாமல் திண்டாட வேண்டியுள்ளது.
அவர்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் பெரிய உதவியாக இருந்தது. இதை நிறுத்தியதால் ஏழைப் பெண்கள் திருமணம் என்பது கேள்விக்குறியதாகி விட்டது. தமிழக அரசு பொதுப்பிரிவினருக்கும் தாலிக்கு தங்கம் வழங்க வேண்டுமென மக்கள் காத்திருக்கின்றனர். - - -

