/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டிப்போ விட்டு டிப்போ மாறும் அரசு பஸ்கள்
/
டிப்போ விட்டு டிப்போ மாறும் அரசு பஸ்கள்
ADDED : ஜன 05, 2025 04:59 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மண்டலத்தில் இயங்கும் புறநகர் பஸ்கள் அடிக்கடி டிப்போ விட்டு டிப்போ மாற்றப்படுவதால் பெர்மிட் நேரப்படி, மதுரையில் இருந்து இயங்காமல் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
மதுரை நிர்வாக இயக்குனரின் கீழ் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மண்டல அலுவலகங்களின் கீழ் 40 டிப்போக்கள் அமைக்கப்பட்டு 2 ஆயிரத்து 442 பஸ்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு இயங்கி வருகிறது.
இந்த 40 டிப்போக்களிலிருந்து இயங்கும் பல்வேறு புறநகர் பஸ்கள் அடிக்கடி வெவ்வேறு டிப்போவிற்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் தலைமையிடமான மதுரை புதூர், புதுக்குளம், பைபாஸ் டிப்போவை சேர்ந்த புறநகர் பஸ்கள் நாகர்கோவில், திருச்செந்தூர், பாபநாசம், செங்கோட்டை, குமுளி, கொடைக்கானல், மூணாறு, சேலம், ஈரோடு, கோவை, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் போன்ற தொலைதூர நகரங்களுக்கு இயங்குகிறது.
இந்நிலையில் அதிக கிலோமீட்டர் தூரம் பஸ்களை இயக்குவதற்காக பல பஸ்கள் டிப்போ விட்டு டிப்போ இடமாற்றம் செய்யப்பட்டு, மதுரை மாட்டுத்தாவணி வந்து புறப்பட்டு செல்லும்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மதுரை புதுக்குளம் டிப்போவில் இருந்து ராஜபாளையம், தென்காசி வழியாக பாபநாசத்திற்கும், திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில் வழியாக சுரண்டைக்கும் இயங்கிய சில பஸ்கள் தற்போது டி.கல்லுப்பட்டி டிப்போக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பஸ்கள் டி. கல்லுப்பட்டியில் இருந்து புறப்பட்டு மாட்டுத்தாவணி வந்து அங்கிருந்து பாபநாசம், சுரண்டைக்கும் தங்களுக்குரிய நேர கால அட்டவணைப்படி புறப்பட்டுச் செல்ல வேண்டும். ஆனால், டிப்போ மாற்றம் செய்யப்பட்ட இந்த பஸ்கள் தற்போது உரிய நேரப்படி புறப்பட்டு வருவதில்லை. இதனால் வழித்தட நகரங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் பாபநாசம், சுரண்டை, ராஜபாளையம் சென்று திரும்பும் பஸ்கள் பல சமயங்களில் இரவு நேரங்களில் திருமங்கலம், கல்லுப்பட்டியுடன் நிறுத்தப்பட்டு ராஜபாளையம் மதுரை இடையே டிரிப்புகள் கட் ஆகிறது அல்லது தாமதமாக இயங்குகிறது. இதனால் வழித்தட நகர மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து அனைத்து பஸ்களும் தங்களுக்குரிய பெர்மிட் நேரப்படி டிரிப்புகள் கட்டாமல் இயங்குவதை மதுரை அரசு போக்குவரத்து கழகம் உறுதி செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

