/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு பஸ்கள் பராமரிப்பு இல்லாமல் இயக்கம்
/
அரசு பஸ்கள் பராமரிப்பு இல்லாமல் இயக்கம்
ADDED : ஜன 09, 2024 12:47 AM
விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் அரசு பஸ்களில் சீட், கம்பி, ஜன்னல் கம்பிகள், ஜன்னல் கண்ணாடிகள், கூரைகள் சேதமானால் அதை சரி செய்யாமல் இல்லாமல் இயக்குவதால் மழைக்காலங்களில் பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்துார், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், காரியப்பட்டி, வத்தராயிருப்பு என மொத்தம் 9 பணிமனைகள் உள்ளது. இந்த பணிமனைகள் மூலம் நகர் பகுதிகள் 236, புறநகர் பகுதிகள் 192, மாற்று பஸ்கள் 20 என மொத்தம் 448 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் ஆண்டு தோறும் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் தரச்சான்று பெறப்பட்டு இயக்கப்படுகிறது.
இவை பெரும்பாலும் பழைய வாகனங்களாக இருப்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு நடு வழியில் நின்று விடுகிறது. இது போன்ற பழுதால் புறநகர், ஊரகப்பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டிற்கு ஒரு முறை தரச்சான்றிதழ் பெறுவதற்காக பஸ்சிற்கு பெயிண்ட், கூரை பராமரிப்பு, சீட், கம்பிகள் புனரமைப்பு, வாகன பழுது நீக்குதல் செய்யப்படுகிறது.
அடுத்த தரச்சான்றிதழ் பெறுவதற்கு இடைப்பட்ட காலத்தில் பஸ்களில் ஏற்படும் பழுதை மட்டும் நீக்குகின்றனர். ஆனால் சீட், கம்பி, ஜன்னல் கம்பிகள், ஜன்னல் கண்ணாடிகள், கூரைகள் சேதமானால் அதை சரிசெய்வதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அடுத்தாண்டு தரச்சான்றிதழ் பெறும் முன்பு சரிசெய்து கொள்ளலாம் என விட்டு விடுகின்றனர். இதனால் மழைக்காலங்களில் மழை நீர் ஒழுகுக்கூடிய பஸ்களில் செல்வதற்கு சிரமமாக உள்ளதாகமக்கள் கூறுகின்றனர். எனவே அரசு பஸ்களில் சேதம் என்று தெரிந்தவுடன் அதிகாரிகள் குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.