/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவமனையில் பணிச்சுமையால் வேலையிலிருந்து நின்ற 25 ஊழியர்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா
/
அரசு மருத்துவமனையில் பணிச்சுமையால் வேலையிலிருந்து நின்ற 25 ஊழியர்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா
அரசு மருத்துவமனையில் பணிச்சுமையால் வேலையிலிருந்து நின்ற 25 ஊழியர்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா
அரசு மருத்துவமனையில் பணிச்சுமையால் வேலையிலிருந்து நின்ற 25 ஊழியர்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா
ADDED : ஆக 21, 2025 08:26 AM
விருதுநகர் :விருதுநகர் அரசு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மாறியதால் ஏற்கனவே 132 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போது கடந்த இரு மாதங்களில் பணிச்சுமையால் 25 ஊழியர்கள் பணிக்கு வராமல் பாதியிலேயே நின்றுவிட்டனர். இப்பிரச்னையை போக்கவும், உள்நோயாளிகள் பாதிக்கப்படுவதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் மூலமாக துாய்மை பணியாளர்கள், டெக்னீசியன்கள், பாதுகாப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்தனர். இவர்களுக்கான ஒப்பந்த நிறுவனத்தின் காலக்கெடு முடிந்து மே இறுதியில் வேறு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இதனால் 132 ஊழியர்கள் பணியை இழந்தனர். இதில் பெரும்பாலானோர் கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள். இவர்கள் டீன் ஜெயசிங்கை சந்தித்து தங்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர் முகாமில் ஒவ்வொரு வாரமும் அரசு மருத்துவமனையில் இருந்து வேலை இழந்தவர்கள் மீண்டும் பணி வழங்கும் படி கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு ஒப்பந்த பணியாளர் இரு வெளிநோயாளிகள் பிரிவு, இரண்டு, மூன்று வார்டுகளை சேர்த்து பார்த்து வருகின்றனர். வார்டுகளில் அறுவை சிகிச்சைக்கு நோயாளிகளை தயார்ப்படுத்துதல், ரத்த பரிசோதனை முடிவுகளை பெறுதல், எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனைக்கு நோயாளிகளை அழைத்து சென்று வருதல், கழிவறை சுத்தம் செய்தல், சலவை பணிகள் தேங்காமல் இருத்தல் உள்பட அனைத்து பணிகளையும் ஒப்பந்த பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
தற்போது ஊழியர்கள் பற்றாக்குறையால் ஒப்பந்த பணியாளர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டு இரு மாதங்களில் மட்டும் 25 ஊழியர்கள் வேலைக்கு வராமல் நின்றுவிட்டனர். இதனால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு ஒப்பந்த ஊழியர்கள் செய்வதறியாது பரிதவித்து வருகின்றனர்.
மேலும் பலர் மாற்றுப்பணிகளை தயார் செய்து கொண்டு வேலையை விட்டு நின்றுவிடலாம் என்ற முடிவில் உள்ளனர். இந்த பணியாளர்கள் பற்றாக்குறை, பணிச்சுமையால் உள்நோயாளிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தேவையான கூடுதல் தனியார் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கவும், உள்நோயாளிகளாக இருப்பவர்களின் நலன் காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

