/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நேரத்திற்கு வராத அரசு டவுன் பஸ்
/
நேரத்திற்கு வராத அரசு டவுன் பஸ்
ADDED : செப் 30, 2024 04:24 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து நேற்று மதியம் மம்சாபுரத்திற்கு உரிய நேரத்திற்கு பஸ் வராததால் ஆத்திரமடைந்த மக்கள் மறியலில் ஈடுபட்டனர். மினிபஸ் கவிழ்ந்து 4 பேர் உயிரிழந்த நிலையில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கம்மாபட்டி, காந்தி நகர், மம்சாபுரம், இடையன்குளம், புதுப்பட்டி வழியாக ராஜபாளையத்திற்கு அரசு டவுன் பஸ்களும், சில தனியார் பஸ்களும் இயங்கி வந்தது.
இதில் கொரோனோ ஊரடங்கு காலத்திற்குப் பிறகு அரசு டவுன் பஸ்கள் சரிவர வருவதில்லை. சரியான நேரத்திற்கு இயங்கவில்லை. இதில் பெண்களுக்கு இலவசம் அறிவிக்கபட்ட பிறகு, அரசு டவுன் பஸ்கள் தங்கள் இஷ்டத்திற்கு இயங்கியது. தனியார் பஸ்கள் வருவதே கிடையாது.
இதனால் காலையில் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்களும், வெளியூரில் வேலை செய்யும் இளைஞர்களும் ஆட்டோவில் பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனை பயன்படுத்தி ஆட்டோக்களில் 15 பேர் உயிரை பணயம் வைத்து பயணித்து வருகின்றனர். இத்தகைய விதிமீறலை மம்சாபுரம் போலீசாரும் கண்கூடாக பார்த்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மினிபஸ் கவிழ்ந்து 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். தங்கள் பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயங்கவேண்டுமென மக்கள் மறியல் செய்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் 1:50 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மம்சாபுரத்திற்கு வரவேண்டிய ராஜபாளையம் டிப்போ பஸ் வராததால் ஆத்திரமடைந்த மம்சாபுரம் மக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் டிப்போ மேலாளர் மாரிமுத்து உடனடியாக வேறோரு பஸ்சை மம்சாபுரத்திற்கு அனுப்பி வைத்தார். மம்சாபுரத்தின் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் டிப்போ டவுன் பஸ்கள், சில தனியார் பஸ்கள் என ஒரு நாளைக்கு 40 நேரங்கள் இயங்கவேண்டிய பஸ்கள் தற்போது சரிவர இயங்கவில்லை.
இதில் பல நேரங்களில் அரசு பஸ் டிரிப்புகள் கட் செய்து நேர்வழியில் செல்கிறது. ராஜபாளையத்தில் இருந்து வரும் பஸ்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வராமல் மம்சாபுரத்துடன் திரும்பி செல்கிறது. தனியார் பஸ்கள் வருவதே இல்லை. தற்போது 4 பேர் உயிரிழந்த பிறகும் கூட அதிகாரிகள் மனமிரங்காமல் அலட்சிய போக்குடன் செயல்படுவதாக மம்சாபுரம் மக்கள் புகார் தெரிவித்தனர்.